Cinema News
இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!.. வசூல் வேட்டையில் ஜெயிலர்!..
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில், விடிவி கணேஷ், எதிர்நீச்சல் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்தியாவில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடியை கடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இது முன்கூட்டிய வசூல் நிலவரம் தான் என்றும் முழுமையான வசூல் நிலவரம் விரைவில் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.
கலவையான விமர்சனம்:
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து ஜெயிலர் படம் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படம் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையிலும், வசூல் வேட்டை நடத்தியது என ரஜினிகாந்தே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
ஆனால், அந்த படத்தின் வசூல் 200 கோடி அளவே இருந்தது. ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் கிளப்பினாலும், படம் பார்க்கும் படியாகத்தான் இருக்கிறது, கதை தான் கொஞ்சம் பழைய கதை என ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டை மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் விமர்சனம்: டார்க் காமெடி கொஞ்சம்.. கொலவெறி ஆக்ஷன் அதிகம்.. ஆனால் கதை?
52 கோடி வசூல்:
தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 23 கோடி என்றும், கர்நாடகாவில் 11 கோடி, கேரளாவில் 5 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 10 கோடி, இந்தியாவின் பிற பகுதிகளில் 3 கோடி வசூலை முதல் நாளிலேயே ஜெயிலர் படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் 52 கோடி வசூலை சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் படம் முதல் நாளிலேயே அள்ளி உள்ளது பிரம்மாண்ட சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீக்கான வில்லன்!.. சப்பை கேரக்டர்கள்!.. ஜெயிலர் படத்தின் மைன்ஸ்கள் இதுதான்…
உலகளவில் 100 கோடி வருமா:
அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் ப்ரீ புக்கிங்கே நடந்துள்ள நிலையில், ஓவர்சீஸில் ஜெயிலர் திரைப்படம் மேலும், ஒரு 50 கோடி வசூலை ஈட்டினால் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் ஈட்டிய படமாக ஜெயிலர் மாறும் என தெரிகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடைசியாக முதல் நாளிலேயே 80 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் அதிகபட்சமாக 85 கோடி வரை எடுக்கும் என்றும் கூறுகின்றனர். சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்துக்காவது அதிகாரப்பூர்வ வசூல் கணக்கை அறிவிக்குமா என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.