80ஸ் குட்டீஸ்களின் உள்ளம் கவர்ந்த ஜோடி... காதலர்களுக்கு எல்லாம் ரோல் மாடல் இவர்கள்தான்!..

Suresh – Nathiya2
காதல் ஊர்வலம் இங்கே... என்று ஊட்டி மலையில் சைக்கிளில் ஹாயாக ஊர்வலம் போகும் போது அந்த ஜோடி இயற்கையின் எழிலையும் மீறி நம்மை ரசிக்க வைக்கிறது. இவர்களுக்குள் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று வியக்காதவர்களே இருக்க முடியாது.
இவர்கள் நடித்த படங்களின் போஸ்டர் எங்காவது ஒட்டப்பட்டால் கூட அதைப் பார்த்ததுமே நமக்கு படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்து விடுகிறது. அந்த அளவுக்கு நம்மை ஈர்த்து விடுகிறது அந்த ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல. சுரேஷ் - நதியா ஜோடி தான்.
பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற படத்தை வி.அழகப்பன் இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது. இசை அமைத்தவர் டி.ராஜேந்தர். சுரேஷ், நதியா, ராஜீவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அருமை. அதிலும் இந்த காதல் ஊர்வலம் பாடலில் சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம்... என்று ஆரம்பிக்கும்போது அந்த இசை உண்மையிலேயே நெஞ்சை வருடுகிறது. இளையராஜாவின் இசையோ என்று நம்மை எண்ணத்தூண்டுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.எஸ்.சித்ரா இருவரும் இணைந்து பாடி நம் மனதை அந்த 5 நிமிடத்திற்குள் மயக்கி விடுகிறார்கள்.

T.Rajendar
பாடல் காட்சியில் சுரேஷ், நதியா இருவரும் சைக்கிளில் ஊட்டி மலைச்சரிவில் போகும்போதும், அங்கு சைக்கிளில் இருந்த படியே காதல் கதை பேசும்போதும், இருவரும் அந்த ரம்மியமான குளிருக்கு இதமாக ஒரே போர்வையைப் போர்த்தியபடி நடக்கும்போதும் நம் நெஞ்சை நிறைத்து விடுகின்றனர். இப்படி ஒரு பாடல் இனி வருமா என்பது சந்தேகமே. 80ஸ் கிட்களுக்கு அடித்த ஜாக்பாட் பாடல்களில் இதுவும் ஒன்று. அன்றைய கல்லூரி இளசுகளுக்கு இவர்கள் தான் உற்சாக டானிக். இவர்கள் அணிந்த ஆடைகளும், ஆபரணங்களும் அப்போது ட்ரெண்ட்செட்டாகி விட்டன.
தொடர்ந்து இந்த ஜோடி பூவே இளம்பூவே, மங்கை ஒரு கங்கை, என் வீடு என் கணவர், இனிய உறவு பூத்தது என நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.