என் இனிய பொன் நிலாவே...!!! 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் இவர் ஒரு பொன்நிலா தான்...!!!
நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரதாப் போத்தன். இவர் உடல்நிலை சரியில்லாமல் மறைந்தது திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவிற்கு நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், பாக்யராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 80களில் இவர் தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடம்பிடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார்.
கமல்ஹாசன் இவரைப் பற்றி கூறுகையில், இவரை முதலில் சந்தித்தது இவர் மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். பிளேயர்ஸ் என்னும் நாடகத்தில் நடித்தார். அப்போது நானும், எனது ஆசான் அனந்து சாரும் இவருடைய திறமையைப் பார்த்து பாலசந்தர் சாரிடம் சொன்னோம். மிகப்பெரிய எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுவார்.
இவரது திறமை இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. வெற்றிவிழா படத்தில் இவருடன் நடித்தது மறக்க முடியாதது. வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளார். நண்பருக்கு வழியனுப்ப இங்கே வந்திருக்கிறோம். அவர் நினைவுகள் என்றென்றும் இனிமையானவை என்றார்.
1952ல் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழிப்படங்களில் நடித்துள்ளார். யதார்த்தமான நடிப்பு, அழகான தமிழ் உச்சரிப்பு என ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
1985ல் வெளியான மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கி தேசிய விருதைப் பெற்றார். வெற்றிவிழா, வறுமையின் நிறம் சிவப்பு, ஆகிய படங்களில் நடித்து கலக்கினார். இவரது தமிழ் உச்சரிப்பு ரசிகர்களைக் கவரச் செய்தது.
1979ல் இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமானார். மூடுபனி படத்தில் இவர் நடிப்பு அற்புதமாக இருக்கும். அதில் என் இனிய பொன் நிலாவே பாடல் இன்றும் நம் காதில் ரீங்காரமிடும். இதுவும் இயக்குனர் பாலுமகேந்திராவின் படம் தான். ஷோபா ஜோடியாக நடித்துள்ளார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜீவா, மகுடம், சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே பிளாக் பஸ்டரில் ஹிட் அடித்தவை. இவர் இயக்குனர் மட்டுமின்றி சினிமாவில் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்து வகை பாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
இவர் இயக்கிய படங்களில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
வெற்றிவிழா
படத்தின் பெயருக்கேற்றாற்போல படம் வெற்றி விழா கொண்டாடியது. கமல், பிரபு, அமலா, குஷ்பூ, சலிம் கௌஸ், சசிகலா, சௌகார் ஜானகி, டிஸ்கோ சாந்தி, வி.கே.ராமசாமி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், ஜனகராஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, பொன்னம்பலம், ராதாரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறக் காரணமே படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன் தான்.
விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்களைக் கொண்ட இந்தப்படம் காட்சிக்கு காட்சி நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடும். இளையராஜாவின் இன்னிசையில் படத்தில் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட்.
மாறுகோ மாறுகோ, பூங்காற்றே உன் பேர் சொல்ல, தத்தோம், வானம் என்ன, சீவி சினுக்கெடுத்து ஆகிய பாடல்கள் உள்ளன.
ஜீவா
1988ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். கங்கை அமரனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். விறுவிறுப்பான திரைக்கதைக்கு பஞ்சமில்லாத படம். சத்யராஜ், அமலா, ஜனகராஜ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹீரோ வந்தாச்சு, பட்டுவண்ண ரோசா, சங்கீதம், தகடு, ஓ...தென்றலே ஆகிய பாடல்கள் உள்ளன.
சீவலப்பேரி பாண்டி
நெப்போலியனின் விறுவிறுப்பான படம் இது. இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கியது. சரண்யா அகானா, ஆர்.பி.விஸ்வம், சூர்யகாந்த், சில்க் ஸ்மிதா, வாகை சந்திரசேகர், சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆதித்யன் இசை அமைத்துள்ளார். ஒயிலா, ஒயிலா, திருநெல்வேலி சீமையிலே, கிழக்கு சிவக்கையிலே, மசாலா அரைக்கிற, அருவி ஒண்ணு ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படம் தென்மாவட்ட மக்களைப் பற்றிய கதை என்பதால் மிகப்பெரும் எழுச்சியை உண்டாக்கியது.