தமிழ் சினிமா உலகில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர்… அட அவரா?

tamil actors
இரட்டை வேடத்தில் நடிகர்கள் நடித்தால் ரசிகர்களுக்கு அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும். நம்மால் முடியாததைப் பொதுவாக திரையில் நாயகர்கள் செய்யும் போது கைதட்டி விசில் அடித்து மெய்சிலிர்த்துப் போவார்கள்.
அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், அஜீத், விஜய்னு பல நடிகர்களும் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடி யாருன்னு தெரிய வேண்டாமா? இது எம்ஜிஆர், சிவாஜிக்கும் முன்னரே நடந்த அதிசயம்.
அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த நடிகர்கள்தான் சினிமாவில் நடிப்பார்கள். அவர்களுக்கு சினிமாவில் நடிப்பது என்பது பெரும் கனவாகவே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் பல படங்கள் மேடை நாடகங்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலகநாதப்பிள்ளை ஒரு நாடக நடிகர். அவருடைய மகன்தான் பி.யு.சின்னப்பா.
இவர் தந்தையுடன் தனது 5வது வயதிலேயே மேடை ஏறி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நடிப்பதோடு மட்டும் அல்லாமல் இனிய குரல் வளத்தையும் கொண்டவர். அதனால் பல நாடகங்களில் இவரே சொந்தக்குரலில் பாடியும் அசத்தினார். 19 வயதில் திரைக்கு வந்தார். 15 ஆண்டுகளில் 25 படங்கள் வரை நடித்தார்.
நடிப்பு, பாடுவது, சண்டைப்பயிற்சி, தெளிவான உச்சரிப்பு, ஹேர் ஸ்டைல் லுக் என அனைத்து விஷயங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த வகையில் பியு சின்னப்பா தான் தமிழ்சினிமா உலகில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த நடிகர். 1940ல் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்சினிமா உலகின் முதல் சூப்பர்ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் படங்களுக்கும், பியு.சின்னப்பாவின் படங்களுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.