ஹிந்தியே தெரியாமல் பாலிவுட்டில் ஹிட் படங்கள் கொடுத்த தமிழ் இயக்குனர்கள்… செம மேட்டரா இருக்கே!!
தமிழில் மாஸ் காட்டிய இயக்குனர்கள் பலர் மற்ற மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்குவது உண்டு. ஆனால் அந்த மொழியை அவர்கள் கற்றுதான் திரைப்படம் எடுக்கிறார்கள் என்றால் அதுதான் இல்லை. இது தான் இங்குள்ள பெரிய ஆச்சரியம்.
குறிப்பாக ஹிந்தியில் ஹிட் படங்கள் பல இயக்கிய தமிழ் இயக்குனர்களுக்கு ஹிந்தியே தெரியாது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா. அப்படி ஹிந்தியே தெரியாமல் ஹிந்தியில் மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களை பார்க்கலாம்.
மணிரத்னம்
மணிரத்னம் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிக முக்கியமான இயக்குனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் ஹிந்தியில் “தில் சே”, “குரு”, “யுவா”, “ராவண்” என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். எனினும் மணிரத்னத்திற்கு இப்போது வரை ஹிந்தி தெரியாது. மணிரத்னத்தால் ஹிந்தியை புரிந்துகொள்ளமுடியுமே தவிர ஒழுங்காக பேச வராதாம்.
இத்தனைக்கும் தனது மேற்படிப்பை அவர் பாம்பேவில் தான் முடித்தார். இது குறித்து கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் “மணிரத்னம் பாம்பேவில் தான் படித்தார். ஆனால் அவருக்கு ஹிந்தி தெரியாது” என குறிப்பிட்டார். மேலும் சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” ஹிந்தி புரோமோஷனுக்காக மணிரத்னம் மும்பைக்கு சென்றிருந்தபோது அவரிடம் ஹிந்தியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது புரியாமல் அவர் ஐஸ்வர்யா ராயிடம், “அவர் என்ன சொல்கிறார்?” என கேட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
பாக்யராஜ்
திரைக்கதை மன்னன் என புகழப்படும் பாக்யராஜ், தமிழில் பாரதிராஜா இயக்கிய “ஒரு கைதியின் டைரி” என்ற திரைப்படத்தை ஹிந்தியில் “ஆக்ரி ராஸ்தா” என்ற பெயரில் இயக்கினார். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் “மிஸ்டர் பேஜாரா”, “பாபா தி கிரேட்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தேசிய இதழுக்கு பேட்டி அளித்த பாக்யராஜ்ஜிடம் “ஹிந்தியில் திரைப்படங்கள் இயக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” என கேட்டனர். அதற்கு அவர் “இல்லை. எனக்கு ஹிந்தி தெரியாது. எனக்கு இங்கிலிஷ் தெரிந்ததால் அவர்களிடம் உரையாடமுடிந்தது” என கூறினார்.
பிரபு தேவா
பிரபு தேவா ஹிந்தியில் “வாண்டட்”, “ரவுடி ரத்தோர்”, “ராதே” என டாப் நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். பிரபுதேவாவுக்கும் ஹிந்தி புரிந்துகொள்ளத்தான் முடியுமே தவிர ஹிந்தி பேசத்தெரியாது.
ஏ ஆர் முருகதாஸ்
ஏ ஆர் முருகதாஸ் ஹிந்தியில் “கஜினி”, “ஹாலிடே”, “அகிரா” என பல திரைப்படங்களை இயக்கியவர். எனினும் ஏ ஆர் முருகதாஸுக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும் இவரது திரைப்படங்கள் மாஸ் ஹிட் திரைப்படங்கள் ஆகும்.
இவர்கள் இதனை ஒரு குறையாக எடுத்துக்கொண்டதே இல்லை. மாறாக ஒருவர் வெற்றிப்பெறுவதற்கு மொழி தடையே இல்லை என இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.