இன்றைய அவலத்தை அன்றே தோலுரித்துக் காட்டிய பாலசந்தரின் அற்புதமான படம்..
இன்றைய அவலத்தை அன்றே சொன்ன பாலசந்தரின் படம்
நம்மவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே ஒரு மோகம் வந்து விடும். அடேங்கப்பா எவ்ளோ அழகா இருக்காரு....கைநிறைய சம்பளம்...சூப்பரான ஊரு....ஜாலியா வாழலாம்...ஜம் ஜம்னு வாழலாம்னு படுகுஷியான கனவுகள் எல்லாம் வந்துவிடும். இது பெண்களுக்கு மட்டுமல்ல.
வெளிநாட்டிற்கு வேலைத் தேடிச் செல்லும் ஆண்களுக்கும் வருவதுண்டு. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்கள். அங்கு போன பிறகு தான் தெரியும். ஐயோடா இப்படி அல்லவா நடந்து போச்சுன்னு...மனம் நொந்து புலம்பித் தவிப்பர். எப்போடா நம் நாட்டுக்குப் போகலாம்? இது ஜெயில் வாழ்க்கை மாதிரி அல்லவா இருக்குன்னு மனம் புழுங்குவர்.
அப்பவே பெரியவங்க எல்லாம் சொன்னாங் களே...கேட்டோமோ...எதிர்த்துப் பேசிட்டு வீராப்பா வந்துவிட்டோமே...இது எங்கே போய் முடியப் போகுதோன்னு தெரியலயேன்னு இக்கட்டான சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பர். இவரது வாழ்க்கையே இருண்டது போலாகிவிடும்.
இதற்கு நாம உள்ளூரிலேயே வேலை பார்த்து அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் மனநிறைவாக இருந்திருக்கலாமே என்று அப்போதுதான் எண்ணத் தோன்றும். மாப்பிள்ளைகள் தான் இப்படி என்றால் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை மணக்க உள்ள பெண்கள் எப்படி எப்படி எல்லாம் நினைப்பார்கள். உங்கள் சிந்தனைக்கு சுவையான விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் பாலசந்தர். அது தான் 47 நாள்கள்.
தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு கருத்தை வலிய சொல்வதில் வல்லவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படம் வெளிவரும் நேரத்தில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் பின்னாள்களில் இவரது படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.
அப்படிப் பல படங்கள் வெளியாகி உள்ளன. அவள் ஒரு தொடர்கதை, தண்ணீர் தண்ணீர், ஒரு வீடு இருவாசல், சொல்லத்தான் நினைக்கிறேன், கல்யாண அகதிகள் ஆகிய படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் 48 நாள்கள் படத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. என்ன கேள்விப்படவே இல்லை என்கிறீர்களா?
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 47 நாள்கள் என்று ஒரு படம் வெளியானது. புதுமணப் பெண்ணான நாயகி கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தன் கணவனோடு வெளிநாட்டிற்குப் போகிறாள். அவன் ஒவ்வொரு நாளும் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் தினம் தினம் செத்துப் பிழைக்கிறாள். இறுதியில் 47 நாள்கள் அவனோடு வாழ்ந்து விட்டு மீண்டு வருகிறாள்.
சிவசங்கரியின் கதை. வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகள் மீது ஆசைப்பட்டு, விசாரிக்காமல் திருமணம் முடித்தால் நிலைமை இப்படித் தான் ஆகும் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் சொன்;ன படம் இது. இன்றைய அவல நிலையை அன்றே தௌ;ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் இயக்குனர் சிகரம்.
சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு, ரமாப்பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். 1981ல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. படத்தில் சிரஞ்சீவி வெளிநாட்டு மாப்பிள்ளையாகவும், ஜெயப்பிரதா அவனது மனைவியாகவும் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் முழுவதையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
மான் கண்ட சொர்க்கங்கள், இவள் உனை நினைக்கும்போதே, தொட்டு கட்டிய மாப்பிள்ளை ஆகிய பாடல்கள் உள்ளன. அந்தக்கால படங்களில் பொதுவாக கதைக்கருவை மையமாகக் கொண்டே பெயரிடுவார்கள். அந்த வகையில் இந்தப் படத்திற்கு 47 நாள்கள் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது என்பதை படம் பார்க்கும் போது சுவாரசியத்துடன் உணர முடியும்.