“பாட்டு நல்லா இல்ல.. வரியை மாத்து”.. முதல் சந்திப்பிலேயே கடுப்பேத்திய எம்.எஸ்.வி… கண்களாலேயே அனலை கக்கிய கண்ணதாசன்…
கண்ணாதாசனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பல கிளாசிக் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில்தான் முடிந்தது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!
1949 ஆம் ஆண்டு மாதுரி தேவி, அஞ்சலி தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கன்னியின் காதலி”. இத்திரைப்படத்தை கே.ராம்நாத் இயக்கியிருந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. கண்ணதாசன் பாடல்கள் எழுதிய முதல் திரைப்படம் இத்திரைப்படம்தான்.
“கன்னியின் காதலி” திரைப்படத்தை தயாரித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் அவர்கள் இசையமைத்த மெட்டுக்களை அப்படியே இசையமைத்துக்காட்டி. கவிஞர்களிடம் பாடல் வரிகளை வாங்க வேண்டும். இதுதான் எம்.எஸ்.வியின் பணியாக அப்போது இருந்தது.
இந்த நிலையில் “கன்னியின் காதலி” திரைப்படத்திற்காக கண்ணதாசனை முதன் முதலாக சந்தித்த எம்.எஸ்.விஸ்வநாதன், அவரிடம் மெட்டை இசையமைத்து காண்பித்தார். கண்ணதாசனை பொறுத்தவரை அவர் மெட்டுக்கு பாடல் எழுதமாட்டார். அவரது பாடல் வரிகளுக்குத்தான் மெட்டிசைக்கச் சொல்வது வழக்கம்.
ஆதலால் மூன்று நாட்களாகியும் பாடல் உருவாகவில்லை. அதன் பின் ஒரு நாள் ஒரு பாடலின் பல்லவியை எழுதிக்கொண்டு வந்திருந்தார் கண்ணதாசன். அதில் “காரணம் தெரியாமல் உள்ளம் கழிகொண்டு கூத்தாடுதே” என எழுதியிருந்தாராம். இதனை பார்த்த எம்.எஸ்.வி “என்னது இது வரி? கழி, கூத்துன்னு எழுதிக்கிட்டு. வேற வரிகளை போடுங்க” என கூறினாராம்.
அதை கேட்டு கண்ணதாசனுக்கு கோபம் தலைக்கேறியதாம். அனல் கக்குவது போன்ற பார்வையால் எம்.எஸ்.வியை முறைத்தாராம். பல மணி நேரங்கள் ஆகியும் மாற்று வரிகளை எழுதாமல் இருந்தாராம் கண்ணதாசன். அப்போது ஜூபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான கவிஞரான உடுமலை நாராயணக்கவி ஸ்டூடியோவிற்குள் நுழைந்திருக்கிறார்.
அங்கே கண்ணதாசன் எழுதியிருந்த பாடல் வரிகளை பார்த்த நாராயணக்கவி, “இந்த கழி, கூத்துங்குற வார்த்தைகள் எல்லாம், எம்.எஸ்.விக்கு பிடிக்காது. வேற வரிகளை போட்டு மாற்றி எழுதிக்கொடு” என கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க: மனஸ்தாபத்தை கலைத்த எம்.ஜி.ஆர்… கலங்கிப்போன இயக்குனரை கைத்தூக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம்…
சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த உடுமலை நாராயணக்கவி, பாடல் வரிகளை மாற்ற முடியாமல் உட்கார்ந்திருந்த கண்ணதாசனை பார்த்திருக்கிறார். உடனே “காரணம் தெரியாமல் உள்ளம் கழிகொண்டு கூத்தாடுதே என்ற வரிகளுக்கு பதிலாக காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே என்று மாற்றிக்கொள்” என கூறினாராம்.
அந்த வரிகள் மெட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருந்ததால் எம்.எஸ்.வியும் சரி என்று ஒப்புக்கொண்டாராம். இவ்வாறு இவர்களின் சந்திப்பு ஒரு மோதலில்தான் தொடங்கியிருக்கிறது. எனினும் பின்னாளில் பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய வாய்ப்புகள் அமைந்தாலும், “மகாதேவி” என்ற திரைப்படத்தில் இருந்துதான் இருவரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.