Cinema History
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவு,.. இமயங்களை இணைத்த இயக்குனர் அவர் யார் தெரியுமா..?
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். அக்காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன் இவர் தன் நடிப்பின் திறமை மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் என் படத்துக்கு கண்ணதாசன் பாட்டு எழுத மாட்டார் என்றும் சிவாஜியும், இனி சிவாஜி படத்துக்கு நான் பாட்டு எழுத போவதில்லை என்றும் கண்ணதாசனும் ஒரு முடிவில் இருந்தார்கள். இந்த மாதிரி சூழ்நிலை நிலவும் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகப்பிரிவினை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஆர் ராதா மற்றும் பலரும் நடிக்க எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் இப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. இப்படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார்.
பின்னர் இயக்குனர் பீம்சிங்கிற்கு இப்படத்தில் தாலாட்டு பாடல் ஒன்று தேவைப்பட்டுள்ளது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. உடனே இயக்குனர் பீம்சிங் சிவாஜியிடம் பாட்டு நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை தாலாட்டு பாடல் என்றால் அது கண்ணதாசன் தான் என்றார். கண்ணதாசனிடம் தாலாட்டு பாடல் கேட்கலாமா என்று கேட்டார் அதற்கு சிவாஜி கணேசன் மறுப்பதும் தெரிவிக்காமல் உடனே ஒத்துழைப்பு கொடுத்தார். உடனே இயக்குனர் பீம்சிங் கண்ணதாசனிடம் அணுகி சூழ்நிலையை எடுத்து சொல்லி கண்ணதாசனும் கருத்து வேறுபாட்டை மறந்து பாடல் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அந்த பாடல் எம்.எஸ் வி இசையில் ”ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இரு இமயங்களின் மனக்கசப்பு இப்பாடல் மூலம் முடிவு பெற்றது.