Connect with us

Cinema History

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்…?!!! கண்ணதாசன் பாராட்டிய ஒரே பாடகி இவர் தான்..!!!

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது…உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது….என்ற பாடல்களைக் கேட்கும்போது நமக்கு டக்கென்று நினைவுக்கு வருபவர் வாணி ஜெயராம் தான். அப்படி ஒரு வசீகரக்குரல். இன்றும் மேடைகளில் சுருதி பிசகாமல் இந்தப்பாடல்களைப் பாடி வருகிறார்.

தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர். காதல் பாடல், டூயட் பாடல் என எதுவாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார். நாட்டுப்புறப்பாடல்களாக இருந்தால் அந்தக் கிராமிய மண்ணின் மணம் மாறாமல் வெண்கலக்குரலில் ரசிக்கும் விதத்தில் பாடி அசத்துவதில் வல்லவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகள் மட்டுமல்லாமல் மொத்தம் 17 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் முதலில் வங்கி ஊழியராக இருந்தவர்.

கவியரசர் கண்ணதாசன் காலத்தில் இருந்து இன்றைய ஏ.ஆர்.ரகுமான் வரை பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

இவர் 1945, நவ.30ல் வேலூர் மாவட்டத்தில் பத்மாவதி என்பவருக்கு மகளாக பிறந்தார். 9 பிள்ளைகளில் இவர் 8வது குழந்தை. 5 சகோதரிகள், 3 சகோதரர்கள். ஆரம்பத்தில் 8வது பெண்குழந்தையாக பிறந்தது பெற்றோருக்கு மிகுந்;த வருத்தத்தை உண்டாக்கியது. அதனால் அவருக்கு பெயர் சூட்டுவதைக் கூட தள்ளிப்போட்டனர். அவரது வீட்டுக்கு வந்த ஜோசியர் ஒருவர் நீங்க பூர்வ ஜென்மத்துல செய்த பலனால் தான் இப்படி ஒரு குழந்தை உங்களுக்குப் பிறந்துள்ளது. சரஸ்வதியின் அம்சம். பெரும் புகழை உங்களுக்குத் தேடித்தருவாள் என்றார். அன்று முதல் அவர்கள் வாணிஜெயராமுக்கு கலைவாணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

vanijayaram

வாணிக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அம்மா பத்மாவதி மிகச்சிறந்த வீணை கலைஞர். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இசையைக் கற்ற போதிலும் வாணி அளவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. 5 வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் பல்வேறு ராகங்களை முறையாகப் பயின்றார். அதுமட்டுமல்லாமல் அதன் பாகுபாடுகளை வேறுபடுத்திக் காட்டும் திறமையும் அவரிடம் இருந்தது.

இசைமேதைக்குரிய அத்தனை திறமைகளும் அப்போதே உள்ளதாக என பலரும் பாராட்டியுள்ளனர். 8வது வயதில் சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து வங்கித் தேர்விலும் வெற்றி பெற்றார். சென்னை எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்தார். சிறந்த பணிக்காக ஐதராபாத்தில் உள்ள வங்கிக்கு மாற்றலானார்.

வங்கியில் ஒருமுறை நடந்த நிகழ்ச்சியில் இவர் பாடியதைக் கேட்டதும் அனைவரும் பாராட்டினர். மும்பை தலைமை வங்கிக்கு பணி மாற்றலானார். சிதார் இசைக்கலைஞரான ஜெயராமுடன் வாணிக்குத் திருமணம் நடந்தது. அதன்பின்னர் இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

இவரது இசைத்திறமையை உணர்ந்து கொண்ட ஜெயராம் இவரை எப்படியாவது பாடகியாக்கி விட வேண்டும் என்று நினைத்தார். இந்துஸ்தானி இசைப்பயிற்சி அவருடைய வீட்டிலேயே அவருக்குக் கொடுக்கப்பட்டது. தினமும் இசைப்பாடம் நடப்பதால் அவர் வங்கி வேலையை ராஜினாமா செய்தார்.

vanijayaram

1969ல் தனது முதல் இசைக்கச்சேரியை பம்பாய் ரசிகர்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்தார். இவரது முதல் இந்திப்படம் குட்டி. இதில் 3 பாடல்களைப் பாடினார். இந்திய அளவில் இவரது புகழ் உயர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி என பிற மொழிப்படங்களிலும் பாடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.

இசை அமைப்பாளர் எஸ்எம்.சுப்பையா நாயுடு இவரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். 1973ல் தாயும், சேயும் படத்திற்காக தனது முதல் தமிழ்ப்பாடலைப் பாடினார். ஏதோ சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் அதே ஆண்டில் வீட்டுக்கு வந்த மருமகள் என்ற படத்தில் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.எஸ். உடன் இணைந்து ஓரிடம் உன்னிடம் என்ற பாடலைப் பாடி தமிழில் அறிமுகமானார்.

பின்னர் அதே ஆண்டில் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் மலர் போல் சிரிப்பது 16 என்ற பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார். பெரிய ஹிட்டானது. தொடர்ந்து பல பாடல்கள் வந்தன. முத்துராமன், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான தீர்க்கசுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற சூப்பர்ஹிட் பாடலைப் பாடினார்.

எம்எஸ்.வியின் இசையும், வாணியின் குரலும் இந்தப்பாடலைக் கேட்ட இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டது. இப்பாடலை இப்போது கேட்டாலும் சுகமாகத் தான் இருக்கும். எங்கம்மா சபதம் படத்தில் அன்பு மேகமே என்ற பாடலைப் பாடினார்.

1975ல் வெளியான அபூர்வ ராகங்கள் படம் வாணிக்கு வேற லெவல் வெற்றியைக் கொடுத்தது. எம்எஸ்.வி.யின் இசையில் கண்ணதாசன் வரிகளில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல், கேள்வியின் நாயகனே என பாடி பட்டி தொட்டி எங்கும் ஹிட் கொடுத்தார். இதில் ஏழு ஸ்வரங்களுக்குள் பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது. கண்ணதாசனே வியந்து ரசித்த பாடல் இதுதான்.

கண்ணதாசன் பாராட்டி எழுதிய முதல் பெண் பாடகி இவர் தான். குன்னக்குடி வைத்தியநாதன், வி.குமார், கே.வி.மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வரை உள்ள அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் வாணி.

google news
Continue Reading

More in Cinema History

To Top