Cinema History
கண்ணதாசனை குடிகாரன் என்று திட்டியதால் உருவான கிளாசிக் பாடல்… இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??
1962 ஆம் ஆண்டு முத்துராமன், தேவிகா, ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நெஞ்சில் ஓர் ஆலயம்”. இத்திரைப்படத்தை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
“நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து கிளாசிக் பாடல்களாக அமைந்தன. குறிப்பாக இதில் இடம்பெற்ற “சொன்னது நீதானா?” என்ற பாடல் காலத்தை தாண்டி நிற்கும் பாடலாக அமைந்தது.
“நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தில் கதாநாயகன் இறக்கும் தருவாயில் இருக்கும்போது தனது மனைவியை பார்த்து, தான் இறந்தபின்பு வேறு ஒரு ஆணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கூறுவார். இதனை கேட்ட மனைவிக்கு அதிர்ச்சி தாங்கமுடியாது. இந்த தருணத்தில் இடம்பெற்ற பாடல்தான் “சொன்னது நீதானா?” என்ற பாடல். அதாவது தனது கணவை பார்த்து “சொன்னது நீதானா?” என்று மனைவி கேட்பதுபோல் அமைந்திருக்கும் பாடல் இது.
இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிச்சுவேஷனை கூறினார். அதன் பின் பல நாட்களாக முயன்ற எம்.எஸ்.விக்கு சரியான ட்யூன் கிடைக்கவில்லை. ஆதலால் இந்த சிச்சுவேஷனுக்கு கண்ணதாசனை பாடல் எழுதச் சொல்லிவிட்டு அதன் பின் அந்த வரிகளுக்கு ஏற்ப ட்யூன் போடலாம் என்று முடிவெடுத்தனர்.
அதன்படி இந்த பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார் எம்.எஸ்.வி. எப்போதும் கண்ணதாசன் 11 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்துவிடுவாராம். ஆனால் அன்று 1 மணி ஆகியும் வரவில்லையாம். அந்த நேரத்தில் எம்.எஸ்.விக்கு பசி தாங்கமுடியவில்லை. ஸ்டூடியோவில் இருக்கும் வேலையாளை சாப்பாடு எடுத்துக்கொண்டு வரச்சொன்னார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் இவ்வளவு மணி நேரம் ஆகியும் வரவில்லையே என்ற கோபத்தில் “இந்த குடிகாரங்களை நம்புனாலே இப்படித்தான்” என்று திட்டினார். இதனை அருகில் இருக்கும் வேலையாள் கேட்டுவிட்டார். அப்போது 2 மணி அளவில் கண்ணதாசன் ஸ்டூடியோவிற்கு வந்தார். ஸ்டூடியோவிற்குள் நுழைந்த கண்ணதாசனிடம் வேலையாள் எம்.எஸ்.வி. அவரை குடிகாரன் என்று திட்டியதை கூறிவிட்டார்.
தனது உயிர் நண்பனா இவ்வாறு நம்மை திட்டியது என மனம் நொந்து போனார் கண்ணதாசன். எனினும் டென்ஷனில் எம்.எஸ்.வி அப்படி திட்டியிருப்பார் என மனதை தேற்றிக்கொண்டாலும், உயிர் நண்பன் இவ்வாறு திட்டியது அவரது மனதை வேதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருந்தது.
நேராக கம்போஸிங் அறைக்குள் சென்ற கண்ணதாசன், எம்.எஸ்.வியிடம் சிச்சுவேஷனை கேட்டார். “ஒரு கணவன் சாகும் தருவாயில் தனது மனைவியை பார்த்து தான் இறந்தபிறகு வேறு ஆணை திருமணம் செய்துகொள் என கூறுகிறான். இதனை கேட்ட மனைவி அதிர்ச்சிக்குள்ளாகிறாள். தன்னுடைய ஆசை கணவனா இவ்வாறு கூறுவது என்பதை பாடல் மூலம் வெளிப்படுத்த வேண்டும்” என அந்த சிச்சுவேஷனை கூறினார் எம்.எஸ்.வி. இதனை கேட்டுக்கொண்டிருந்த கண்ணதாசனின் மனதில் எம்.எஸ்.வி. தன்னை குடிகாரன் என திட்டியது நினைவில் வந்தது. பாடலின் சிச்சுவேஷனையும் எம்.எஸ்.வி. தன்னை திட்டியதையும் ஒரு சேர நினைவில்கொண்ட கண்ணதாசன், எம்.எஸ்.வியை பார்த்து கேட்பது போலவே “சொன்னது நீதானா?, சொல் சொல் என் உயிரே” என்ற வரியை எழுதினார்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன்… தற்கொலை செய்யப்போன அந்த பிரபல நடிகை… இப்படி எல்லாம் நடந்திருக்கா??
இந்த வரியை பார்த்த எம்.எஸ்.விக்கு, கண்ணதாசன் நாம் திட்டியதை கேள்விப்பட்டுத்தான் இப்படி ஒரு வரியை எழுதியிருக்கிறார் என தெரிய வந்தது. அந்த வரியை பார்த்த எம்.எஸ்.விக்கு அழுகையாக வந்ததாம்.
“கவிஞரே, என்னை மன்னிச்சிடுங்க. நான் ஏதோ வேலை டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன். அதெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க எனக்கு நுணி நாக்கு பேச்சுத்தான். உங்களுக்கே தெரியும் என்னைய பத்தி” என கண்ணதாசனிடம் மன்னிப்பு கேட்டாராம். அதற்கு கண்ணதாசன் “விச்சு, நீ ஒரு குழந்தைடா. போய் ட்யூனை போடு” என எம்.எஸ்.வியிடம் அன்போடு கூறினாராம். அப்படி உருவாக்கப்பட்ட பாடல்தான் “சொன்னது நீதானா” என்ற பாடல்.