அரை மணி நேரத்துல உருவான சினிமா பாடல்... அதுவும் சூப்பர் மெலடி..!
பாரதிராஜா, பாக்கியராஜ், கண்ணதாசன், இளையராஜா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சேர்ந்து ஒரே படத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும்? அந்தக் கனவை நனவாக்கிய படம் தான் புதிய வார்ப்புகள். இந்தப் படத்தை இயக்கியவர் பாரதிராஜா.
இசை அமைத்தவர் இளையராஜா. ஹீரோவாக நடித்தவர் பாக்கியராஜ். பாடல் எழுதியவர் கண்ணதாசன். இந்தப் படத்துல ஒரு ஸ்பெஷல் நடந்தது. அது என்னன்னு பார்ப்போமா...
1979ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் பாக்கியராஜ், ரதி உள்பட பலர் நடித்த படம் புதிய வார்ப்புகள். இந்தப் படத்தில் பாக்கியராஜ் முந்தானை முடிச்சு படத்துல வர்ற மாதிரி வாத்தியாராக வருகிறார். அங்கு ஒரு பெண்ணுடன் காதல். நாட்டாமை இடையில் கரடி மாதிரி வருகிறார். அப்புறம் என்னாச்சு? அது தான் கதை.
'வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்' என்ற அற்புதமான பாடல். இதை எப்போது கேட்டாலும் அற்புதமாக இருக்கும். அவ்வளவு சூப்பர்ஹிட் மெலடி. இந்தப் பாடல் உருவானது ஒரு சுவாரசியமான விஷயம்.
படத்துக்கு பூஜை போட்டாச்சு. அதற்கு முன்பே இதயம் போகுதே என்ற பாடலை ரெக்கார்டிங் பண்ணி ரெடியா வச்சிருந்தாங்க. இந்தப் பாட்டை எடுத்ததும் பூஜை போடலாம்னு பாரதிராஜா நினைத்தாராம்.
ஆனால் திடீரென ஒரு டூயட் எடுக்கலாமேன்னு ஐடியா வந்துருக்கு. அதனால நைட் 10 மணிக்கு இளையராஜாவுக்கு போன் போடுகிறார். 'காலையில கண்ணதாசனை அழைச்சிட்டு வாங்க. நீங்க டியூன் போட்டு ரெடியா வச்சிருங்க'ன்னு விவரத்தைச் சொல்கிறார். அதே போல மறுநாள் காலை எல்லாரும் வருகிறார்கள்.
இளையராஜா டியூனோடு காத்திருக்கிறார். கண்ணதாசன் வந்ததும் அதற்கு பாடல் எழுதுகிறார். ரெக்கார்டிங் நடக்குது. எல்லாமே அரை மணி நேரத்துக்குள்ள முடியுது. என்ன ஒரு ஆச்சரியம். அருமையான காதல் மெலடி ரெடி. மலேசியா வாசுதேசன், எஸ்.ஜானகியின் ரம்மியமான குரல்கள் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.