
Cinema History
இந்தி இசையால் வெல்ல முடியாத தமிழ் இசை…தந்தது யார்..? நிழல் உலகில் நடக்கும் மர்மத்தைத் தோலுரித்த படம்..!
கொலை, வைரக்கடத்தல், போலீஸ் துரத்தல் என்று பரபரப்பான கதை. கிட்டத்தட்ட இதைப் பார்க்கும்போது ஒரு கிரைம் நாவலைப் படித்தாற்போன்ற உணர்வு ஏற்படும். படத்தின் பெயர் டிக் டிக் டிக். இயக்கியவர் பாரதிராஜா. 1981ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கமலும், மாதவியும் பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதில் மாதவி மாடலிங் கேர்ளாக வலம் வருவார். இவர்களுடன் ராதா, ஸ்வப்னா, நிஷா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
சரிகாவுக்கு கவுரவ வேடம். டைட்டிலுக்கு முன்பே கொல்ப்பட்டு விடுவார். மாடலிங் உலகின் மறுபக்கம் தொழிலதிபர்களின் வித்தியாசமான ஆர்வம், காதல், காமம் என்று பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.
அதே போல பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தன. இது முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவத்தைத் தந்தன. மேற்கத்திய இசையில் அமைந்த பாடல்களை இப்படத்திற்குத் தந்திருந்தார் இசைஞானி இளையராஜா.
நிழல் உலகம் ஆபத்தானது. இதில் சிக்கிக் கொண்ட கதாபாத்திரங்களின் நிலை என்ன? இதை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்துவிட்டன.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் வல்லவன் ஒருவன் படத்தைப் பார்க்கலாம். இதில் இடம்பெற்ற பளிங்குனால் ஒரு மாளிகை பாடல் ரசிகர்கள் மத்தியில் தனி அந்தஸ்தைப் பெற்றது.
அதே போல இந்தப் படத்தின் பாடல்களும் இனிமையானவை. ஒருவித ரகசியமும், மர்மமும் கொண்டவை. படத்தின் ஆரம்பத்திலேயே மாடல் அழகியின் மரணம் மர்மமான முறையில் அரங்கேறுகிறது. அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலகம் என்ன என்று படத்தைப் பார்க்கும் ரசிகன் ஆவலாய் தேடத் தொடங்கி விடுகிறான்.

ILaiyaraja
அப்போது ஒலிக்கும் பாடல் தான் இது…ஒரு நிலாக் காலம்…என்னப்பா இவ்ளோ சூப்பரான பாடல் இந்தப் படத்தில் தான் இருக்கா என கேட்பீர்கள். அவ்வளவு ரசனையைக் கொண்டது இந்தப் பாடல்.
இதில் கோரஸ் வேறு நம்மை எங்கோ அழைத்துச் சென்று விடுகிறது. ட்ரம்ஸ் என்றாலே அதிரடியாக முழங்கும். ஆனால் இந்தப் பாடலில் மெல்ல அதிர்கிறது. அது போதாது என்று கிளாரிநெட், கித்தார் என்று இசையில் மனதை லயிக்கச் செய்து விடுகிறார் இளையராஜா. அதன் பிறகு தான் ஜானகி பல்லவியை பாடத் தொடங்குகிறார்.
மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய 3 மாடலிங் அழகிகள் தோன்றும் இப்பாடலில் பெண்கள் தங்கள் தனித்துவம், வசீகரம் குறித்து பெருமிதம் கொள்வது போன்று பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
அதாவது அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ என்று அவ்வரிகள் வரும். இந்த வரிகளை கவர்ந்திழுக்கும் வகையில் ரகசியக் குரலில் ஜானகி பாடியிருப்பார்.
வாகனங்கள் வேகம் வேகமாக சாலைகளில் செல்கின்றன. உயர்ந்த கட்டிடங்கள், கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னே இருக்கும் மர்மம், ஐரோப்பிய மணம் வீசும் அழகு சாதனப் பொருள்கள் என்று பல்வேறு படிமங்களின் இசை வடிவமாக இந்தப் பாடல் உருவானதை செவிகுளிர கேட்கையில் தான் தெரிகிறது.
பாடலின் இடையிடையே டி.பி.கோபாலகிருஷ்ணனின் குரலில் ஒரு ஜதி கோவையும் வந்து நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகிறது.
டிரம்ஸின் துள்ளலுடன் நாஹ்ருதன…தீரனன…தீரனன… என்று அவர் பாடும் இந்த ஜதியைக் கேட்டு நாமும் பாடத்தொடங்கி விடுவோம். இந்தப் படத்தில் மட்டும் தான் இப்படி ஒரு ஜதி வருகிறதா என்றால் இல்லை.
கே.பாக்யராஜ் நடித்த சின்னவீடு படத்தைப் போய் பாருங்கள். அதில் வரும். அட மச்சம் உள்ள மச்சான் என்ற பாடலில் டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஜதியை நாம் கேட்கலாம்.
பாடல் முழுவதும் டிரம்ஸை ஒலிக்க விட்டு இருப்பார் இளையராஜா. அவரது கற்பனை வடிவங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறன் ஜானகியிடம் நிறையவே இருந்தது. அதே போல ஜானகியின் பன்முகத்தன்மையை உணர்ந்து கொள்ளும் திறன் இளையராஜாவிடமும் இருந்தது.
இருவரின் இந்தப் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் தன்மை தான் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்தன.
அதேபோல இன்னொரு மர்மமான பாடல் நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம் என்று ஒரு பாடல் வரும். இதை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

Tik Tik Tik
இப்படத்தில் இடம்பெற்றது ஒரே ஒரு டூயட்தான். பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே என்ற இந்தப் பாடல் செம சூப்பராக இருக்கும். கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்ஸியின் மெலடி இது.
பரதநாட்டியத்துக்கான ஜதியுடன் இந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. முதலில் கர்நாடக இசைப்பாணியில் மிருதங்கம் தாளம் போடுகிறது. அதற்கேற்ப ஐ லவ் யூ என்று ஜேசுதாஸ் பாடுவார்.
இப்பாடலைப் படத்தில் பார்க்கும்போது மாதவி பரதநாட்டியம் ஆடுகிறாள். அவளது அகலமான கண்கள் காட்டும் பாவங்களில் மயங்குவது ஹீரோ கமல். கர்நாடக இசை, மெல்லிசை இழையோட வயலின் இசை அதனுடன் மெதுவாகக் கலக்கிறது. இப்படி ஒரு இசைக் கலப்பை இளையராஜாவால் மட்டும் தான் செய்ய முடியும்.
இதே படம் கரிஷ்மா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்தார். என்றாலும் தமிழ்ப்பட பாடல் முன் அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் ராகதேவன்…இசைஞானி…இளையராஜா தான்.

Kamal
இந்தப் படத்தில் கமல் புகைப்படக்கலைஞராக வருகிறார். ரொம்பவே யூத்தாக வரும் இவர் படம் முழுவதும் துருதுருவென வருவார்.
அதே போல் மாதவியும் வெகு அழகாக இருப்பார். இருவருடைய கெமிஸ்ட்ரியும் படம் முழுவதும் நல்லா ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்பதை படத்தைப் பார்த்தாலே உணரலாம்.