Tourist family: டூரிஸ்ட் பேம்லி படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை சொன்ன பிரபலம்

tourist family
சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள சூப்பர்ஹிட் படம் டூரிஸ்ட் பேம்லி. அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். எம்எஸ்.பாஸ்கர், யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர், டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வரும் மே 1ல் வெளியாகிறது. இந்தப் படத்தில் சசிக்குமாரும், சிம்ரனும் இலங்கைத் தமிழைப் பேசியுள்ளனர். இது படத்துக்கு இன்னும் கூடுதல் ஹைப்பைத் தந்துள்ளது.
இந்தப் படத்தை லைகா நிறுவன தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் பார்த்துள்ளார். பார்த்த உடனே அவர் கொடுத்த முதல் விமர்சனம் இதுதான். இந்தப் படம் மிகவும் என்னை ஈர்த்தது. மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோரின் நடிப்பு புதுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளிதாஸ் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று கமலேஷ் நடித்துள்ளார். அது பாராட்டத்தக்க வகையில் இருந்தது. முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குனர் அபிஷன்.

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி படத்துக்கு முன்பு வரை பல தோல்விப்படங்களைக் கொடுத்தார் சசிக்குமார். அயோத்தி பட ரிலீஸ்சுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கொஞ்ச நாளா கடனை அடைக்கிறதுக்காக பணத்துக்காக நிறைய படத்துல நடிச்சேன். இனிமே நிம்மதியா மனசுக்கு பிடிச்ச படம் மட்டும் பண்ணலாம்னு இருக்கேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் சொன்னதைப் போலவே அயோத்தி, கருடன், நந்தன் என்று தரமான படங்களில் நடித்தார். தற்போது நடித்துள்ள டூரிஸ்ட் பேம்லி படம் சூப்பர்ஹிட்டாக அமையும் என்றே தெரிகிறது.