கமலின் அந்த சூப்பர்ஹிட் பாடல்... 60களில் எழுதிய கவிதையா? பிரபலம் சொன்ன தகவல்
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிக மிக நெருக்கமான பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். இவரது முதல் கவிதையை இலக்கியம் பத்திரிகையில் வெளியிட்டது கவிஞர் சுரதா தானாம். கவிஞர் முத்துலிங்கம் தான் எழுதிய கவிதையை பற்றி இப்படி சொல்கிறார்.
பாரதிதாசன் நான் எழுதிய கவிதைகளை 20 நிமிடம் படித்துப் பார்த்தார். அதில் இருந்து 2 கவிதைகளைப் பாராட்டினார். அதில் ஒன்று காதலனும், காதலியும் உரையாடுவது போன்ற கவிதை. தேனைப் போல் இனிககின்ற பெண்ணே என்றேன்... தெவிட்டுகின்ற பொருளா நான் என்று கேட்டாள்... வானத்து முழுநிலவே என்று சொன்னேன். வந்து வந்து தேய்ந்து அழியும் பொருளா என்றாள். முகில் போல கூந்தல் என்றேன். என் கூந்தல் போல் முகிலுக்கும் மணம் உண்டா என்று கேட்டாள்.
நகம் போல பவளம் என்றேன். என் நகம் போல் நறுக்கி விட்டால் வளர்வதுண்டோ பவளம்? என்றாள். கற்கண்டு நீ என்றேன். எறும்பும், நீயும் கடிக்கின்ற பொருளா நான் எனச் சினந்தாள்... இப்படி ரசனையைத் தூண்டும் கேள்வி பதில்கள் நிறைந்த கவிதை இது. 60களில் கவிஞர் முத்துலிங்கம் எழுதியதாம்.
இந்த கவிதையில் இருந்து ஒரு நாலு லைனை எடுத்து தான் உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலில் சொருகியுள்ளார் கவிஞர் முத்துலிங்கம்.
ஒருநாள் கவிஞர் சுரதா முத்துலிங்கத்தை சந்தித்த போது அவரது இந்தக் கவிதையை பற்றி சிலாகித்துச் சொன்னாராம். நீ ஏதாவது சினிமாவில் பாடலில் கூட இதை வைக்கலாம் என்று சொன்னாராம். அதற்கு மறுநாள் உன்னால் முடியும் தம்பி படத்திற்கு பாட்டு எழுத அவரை அழைத்தார்களாம். இதழில் கதை எழுதும் நேரமிது... மனதில் சுகம் மலரும் மாலையிது... என்ற பாடலில் இப்படி வரும்.
நாளும் நிலவது தேயுது மறையுது. நங்கை முகமென யாரதைச் சொன்னது? என்ற அந்த கவிதையின் வரிகளை இந்தப் பாடலில் அழகாகக் கொண்டு வந்து இருந்தார் கவிஞர் முத்துலிங்கம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.