ரொம்ப நம்புனா இப்படித்தான்.. செயின ஆட்டைய போட்டாங்க! கலகலப்பாக பேசிய வடிவேலு

vadivelu
Vadivelu: தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. விகே ராமசாமி, நாகேஷ், பாலையா, சுருளிராஜன், சந்திரபாபு என நகைச்சுவையில் கோலோச்சிய எத்தனையோ லட்சிய நடிகர்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களை யாரும் நம்மால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அவரவர் நகைச்சுவையில் தனி இடம் பிடித்தவர்கள்.
அந்த வரிசையில் வடிவேலுவும் ஒருவர். தன்னுடைய முக பாவனையாலும் உடல் மொழியாலும் நகைச்சுவையில் ஒரு தனி புரட்சி செய்தவர். ராஜ்கிரண் படத்தில் நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக வலம் வந்தார். கவுண்டமணி, செந்தில் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போதே அவர்களுடன் சேர்ந்து திரையை பகிர்ந்து கொண்டவர் வடிவேலு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அப்பா கதாபாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்தமான அப்பாவாக அந்தப் படத்தில் தோன்றினார். தொடர்ந்து இனிமேல் இப்படிப்பட்ட குணச்சித்திர கேரக்டரில்தான் நடிப்பார் என்றும் இனி அவருக்கு காமெடி செட்டாகாது என்றும் அனைவரும் கூறி வந்தார்கள்.
ஆனால் எவ்வளவு காலம் ஆனாலும் காமெடியில் நான் தான் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். டிரெய்லர் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக வடிவேலுவை சந்தித்த போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் துரோகம் என்று சொன்னதும் என்ன நியாபகம் வருகிறது என கேட்க அதற்கு வடிவேலு துரோகத்தை யாராலும் மறக்க முடியாது. நம்பிக்கை துரோகம்னு ஒன்னு இருக்கு.எல்லார் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. எனக்கும் நடந்திருக்கிறது. ஏன் எனக்கு முன்னாடி இருந்த காமெடி நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது. அதில் சுருளிராஜன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை காமெடியாக சொல்கிறேன் என வடிவேலு சொல்ல ஆரம்பித்தார்.
சுருளிராஜன் எப்போதும் அவர் கழுத்தில் 25 பவுன் மதிக்கத்தக்க செயினை அணிந்திருப்பாராம். மேக்கப் போடும் போது மட்டும் அதை கழட்டி பின்னாடி இருக்கும் தன் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு மாலை வந்து வாங்கிக் கொள்வாராம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. தினமும் இப்படித்தான் எனும் அந்த செயினை கழட்டிக் கொடுக்கும் போது திரும்பி பார்க்கவே மாட்டாராம். தன் உதவியாளரிடம்தானே கொடுக்கிறோம் என்ற நம்பிக்கையில் பார்க்காமல் கொடுப்பாராம்.
அப்படித்தான் ஒரு நாள் கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் செயினை எங்கடா என கேட்க அந்த உதவியாளர் எந்த செயின் என கேட்டிருக்கிறார். உடனே சுருளிராஜனுக்கு ஒரே ஷாக். நீ தானடா வாங்குன எனும் போது எங்கிட்ட எங்க கொடுத்தீங்க? இல்லையே என்றதும் டேய் 25 பவுன் செயின்டா.. யாருடா ஆட்டைய போட்டது என கேட்டு அன்றிலிருந்து மூன்று நாள்கள் படப்பிடிப்பிற்கு வரவே இல்லையாம் சுருளிராஜன். இதை அந்த பேட்டியில் நகைச்சுவையாக சொல்லி சிரித்தார் வடிவேலு.