“வாரிசு” திரைப்படத்தையும் ரிலீஸ் பண்ணப்போறார் உதயநிதி… இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்த்திருக்கமாட்டீங்க!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருந்தது. அதே போல் “துணிவு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இரண்டு திரைப்படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீப நாட்களாக “வாரிசு” திரைப்படத்தின் திரையரங்கு உரிமமும் உதயநிதி ஸ்டாலினின் கைகளுக்குத்தான் செல்லும் என பல சினிமா விமர்சகர்களிடம் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில்தான் தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லலித் குமார். அதாவது “வாரிசு” திரைப்படத்தை தமிழகத்தில் லலித் குமார்தான் வெளியிடுகிறார். எனினும் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோவை, வட ஆர்காடு, தென் ஆர்காடு போன்ற பகுதிகளில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தை வெளியிடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ விடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லலித்குமார்.
நேற்று “வாரிசு” திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, “தமிழ் நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன். ஆதலால் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. அதனால் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அதிக திரையரங்குகள் ஒதுக்கவேண்டும் என்று கேட்கப்போகிறேன்” என கூறியிருந்தார்.
தில் ராஜுவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அஜித், விஜய் ரசிகர்களிடையே யார் நம்பர் ஒன் என்ற விவாதமும் எழுந்து வருகிறது.
தில் ராஜு அவ்வாறு அளித்த பேட்டியை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது தமிழகத்தின் சில இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.