பொய் சொல்லத் தெரிஞ்சா சொல்லுங்க… தன்னிடம் கப்சா விட்ட ஒளிப்பதிவாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்…
இந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியம், விஜய் நடித்த “யூத்” திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “பிளாக் ஃப்ரைடே”, “பர்னீதா”, “லவ் ஆஜ் கல்” போன்ற பல பாலிவுட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
மேலும் தமிழில் “சக்கர வியூகம்”, “சதுரங்க வேட்டை”, “நம்ம வீட்டுப் பிள்ளை”, “கர்ணன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நட்டி, “யூத்” திரைப்படத்தில் விஜய்யுடன் பணியாற்றியபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “யூத்” திரைப்படத்தில் ஒரு காட்சியை படமாக்கும்போது அதில் விஜய்யுடன் நடித்திருந்த பெண் ஒருவர் ஒரு புடவையை அணிந்திருந்தார். ஆனால் அதே காட்சியை இரண்டாவது டேக்கில் படமாக்கும்போது அந்த பெண் வேறு ஒரு புடவையை அணிந்திருந்தாராம். அந்த காட்சியை படமாக்கி முடித்தப்பிறகுதான் கண்டின்யூட்டி மிஸ் ஆனது தெரிய வந்ததாம். நிச்சயமாக மீண்டும் அந்த காட்சியை படமாக்க வேண்டும் என்ற நிலை வந்ததாம்.
ஆனால் விஜய் அன்று மாலை மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டியது இருந்ததாம். எப்படியாவது விஜய்யை அந்த காட்சியில் மீண்டும் நடிக்க சம்மதிக்க வைக்க வேண்டும் என அத்திரைப்படத்தின் இயக்குனரான வின்சென்ட் செல்வா, நட்டியை விஜய்யிடம் பேசுவதற்கு அனுப்பியிருக்கிறார்.
விஜய்யின் அருகே சென்ற நட்டி, “சார் கேமரால ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு. இந்த காட்சியை மறுபடியும் எடுத்தாகனும் சார்” என்று பொய் கூறியிருக்கிறார். உடனே விஜய்யும் “சரி, சீக்கிரம் படமாக்குங்கள், நான் இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிற்கு போக வேண்டியது இருக்கிறது” என கூறியிருக்கிறார். அதன் பின் விறுவிறுவென அந்த காட்சியை மீண்டும் படமாக்கத் தொடங்கினார்களாம்.
இதையும் படிங்க: பா.விஜய் எழுதிய சர்ச்சையான வரிகளை தன்னுடைய ஸ்டைலில் பயன்படுத்திய நா.முத்துக்குமார்… சென்சார் போர்டுக்கு என்னதான் ஆச்சு?
அந்த காட்சியை படமாக்கி முடித்தபிறகு நட்டியை தனியாக அழைத்த விஜய் “அதாவது பொய் சொல்லத் தெரிஞ்சா பொய் சொல்லனும். பொய் சொல்லத் தெரியலைன்னா பொய் சொல்லக்கூடாது” என கூறியிருக்கிறார். இதனை கேட்டதும் நட்டி “என்ன சார், புரியல சார்” என கூற “அந்த பொண்ணு வேற புடவையை கட்டிட்டு நடிச்சிருக்காங்க. இது தெரியாதா எனக்கு. போங்க போங்க, இனிமே இப்படி எல்லாம் பொய் சொல்லாதீங்க. அடுத்தவன் பிரச்சனையை உங்க தலையில போட்டுக்காதீங்க” என அறிவுரை கூறி அனுப்பினாராம் விஜய்.