200 பேருக்கு பிரியாணி; ’தல’-க்கு தளபதி கொடுத்த வாட்ச் - தல-தளபதியோட ஃபேவரைட் மீட்டிங் ரீவைண்ட்!
தமிழ் சினிமாவின் இருபெரும் முன்னணி நடிகர்கள் மீட் பண்ணிக் கொண்டால் எப்படி இருக்கும் அந்த இடம்... அதுவும் இரு துருவங்களாகக் கருதப்படும் தல மற்றும் தளபதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு அளவளாவினால், அந்த இடம் எந்த அளவுக்கு எனர்ஜியோடு இருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படி, அஜித்தும் விஜய்யும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட ஒரு முக்கியமான தருணம் பற்றி தெரியுமா?
இயக்குநர் வெங்கட்பிரபுவோட டைரக்ஷன்ல அஜித், த்ரிஷா, அர்ஜூன்னு பெரிய ஸ்டார் காஸ்டிங் நடித்து, மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இதில், அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்து கலக்கியிருப்பார். அதே சமயத்தில் விஜய் வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மங்காத்தா படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சென்னை புறநகரில் இருக்கும் பின்னி மில்லில்தான் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். அப்படி மங்காத்தா ஷூட்டிங் நடண்ட்து கொண்டிருந்த சமயத்தில், வேலாயுதம் படத்துக்காக ரயில்வே ஸ்டேஷன் செட் போட்டு ஷூட் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
வேலாயுதம் ஷூட்டிங்குக்கு முன்பே அங்கு மங்காத்தா ஷூட் நடந்துகொண்டிருந்தது. வேலாயுதம் ஷூட் பற்றி கேள்விப்பட்டவுடன், நம்ம இருக்க இடத்துக்கு விஜய் சார் வந்திருக்கிறார். நாம போய் பார்ப்பதுதான் முறையாக இருக்கும்னு, அவரே நேரடியாகப் போய் விஜய்யைப் பார்த்திருக்கிறார். அதன்பின்னர், இந்தத் தகவல் கேள்விப்பட்டு அஜித்தும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது, அஜித் - விஜய் என இருவருடனும் சேர்ந்து வெங்கட்பிரபு போட்டோ எடுத்துக் கொண்டாராம்.
இதையும் படிங்க: ப்ளீஸ் அதை கேட்காதீங்க.. அஜித் சார் என்ன திட்டுகிறார்.. புலம்பும் மெகா ஹிட் இயக்குனர்.!
அந்த போட்டோவை மங்காத்தாவில் நடித்துக் கொண்டிருந்த தனது சகோதரர் பிரேம்ஜி உள்ளிட்டோரிடம் காட்டி ரொம்பவே பெருமைப்பட்டாராம் வெங்கட்பிரபு. அதைப்பார்த்த பிரேம்ஜி, நாங்களும் அவங்க ரெண்டு பேர் கூட சேர்ந்து போட்டோ எடுக்கணும்னு சொல்லி, அஜித்திடம் இதைப்பற்றி கேட்டிருக்கிறார்.
அதற்கு அஜித், கவலைப்படாதே பிரேம் நாளைக்கு ரெண்டு யூனிட்டுக்கும் சேர்த்து பிரியாணி செய்றேன். விஜய்யையும் இங்க வரச் சொல்லிடலாம். சாப்பிட்ட பிறகு ஒண்ணாவே போட்டோ எடுத்துக்கலாம் என்று சொல்லி தேற்றியிருக்கிறார். அதேபோல், அடுத்த நாள் இரண்டு யூனிட்டுகளையும் சேர்த்து 200 பேருக்கும் மேல் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி சமைத்ததோடு, அவர், தனது கையாலேயே பரிமாறி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
விஜய்யும் அந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு, பிரியாணி செஞ்ச கைக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட்னு சொல்லி அஜித்துக்கு வாட்ச் பரிசளித்ததோடு, அவரோட கையாலேயே கட்டியும் விட்டிருக்கிறார். இதைப்பார்த்த இரண்டு யூனிட் ஆட்களும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். அதன்பிறகுதான் ஃபேமஸான அந்த போட்டோவை எடுத்திருக்கிறார்கள். போட்டோ எடுக்கும்போது, வெங்கட்பிரபுதான் சொல்லியிருக்கிறார், உன்னோட பேமஸான சைகையை செஞ்சுக்கோனு. அப்படி பிரேம்ஜி செய்யவும், அதையே அஜித்தும் விஜய்யும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். வைரலான அஜித் - பிரேம்ஜி - விஜய் இருக்கும் போட்டோ எடுக்கப்பட்டபோது நடந்த சம்பவம் இதுதான்.