அப்டேட் கொடுடா சன் பிக்சர்ஸ்.. டிவிட்டரில் பொங்கும் விஜய் ரசிகர்கள்...
விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடிக்கும் புதிய படங்கள் தொடர்பான செய்திகளை அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவிக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை எனில் தயாரிப்பாளர் கதி அவ்வளவுதான்.. அவரின் டிவிட்டர் பக்கத்தில் சென்று அவரை திட்டி தீர்ப்பதையும், ஹேஷ்டேக் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுப்பதையும் விஜய், அஜித் ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் அதற்கு பெரிய உதாரனம். இவர் வலிமை அப்டேட் எதுவும் கொடுக்காததால் இவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், அரசியல் தலைவர்களிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.
சிலர் கிரிக்கெட் போட்டி விளையாடும் மைதானத்திலும் வலிமை அப்டேட் கேட்டு போனிகபூருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதை தொடர்ந்து இப்படி செய்ய வேண்டாம் என நடிகர் அஜித்தே அறிக்கை வெளியிடும் அளவுக்கு சென்றது. ஆனாலும் ரசிகர்கள் மாறவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியானது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு வெளியாகும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் அடங்கவில்லை.
3வது போஸ்டரை வெளியிடுமாறு கூறி #அப்டேட்_குடுடா_சன்பிக்சர்ஸ் என்கிற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை 54 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளதால் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது.
சிலரோ 3வது லுக் போஸ்டர் ஜனவரி 1ம் தேதிக்கு வரணும் என மிரட்டும் தொனியிலும் பதிவிட்டு வருகின்றனர்.