திருப்பதி பட பூஜைக்கு வரவே மாட்டார்... பேரரசுவை காமெடி செய்த அஜித்... ஆனா நடந்தது என்ன தெரியுமா?
விஜய் மற்றும் அஜித்தின் மோதல் சினிமா வட்டாரத்தினர் அறிந்த சேதி தான். இன்று அது குறைந்து இருந்தாலும் ஒரு காலத்தில் இருவருமே திரைப்படங்களில் வார்த்தை போர் நடத்தினர். அதனால் இருவரையுமே ஒரே இடத்தில் பார்ப்பது அரிதாகவே இருந்தது. இதை முறியடித்தது முதலில் விஜய் தான். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குனர் பேரரசு தெரிவித்து இருக்கிறார்.
திருப்பாச்சி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு. விஜயின் நடிப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக விஜயை வைத்தே சிவகாசி படத்தினையும் எடுத்தார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருக்கு அஜித்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான படம் தான் திருப்பதி. இப்படத்திற்கு தனக்கு பேரரசு தான் வேண்டும் என அஜித்தே கேட்டு வாங்கினாராம்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜைக்கு விஜயை அழைக்க விரும்பி இருக்கிறார் இயக்குனர் பேரரசு. விஜயை சந்தித்து திருப்பதி பூஜைக்கு வருமாறு அழைக்க, தளபதியும் சரி வருகிறேன் எனக் கூறிவிட்டாராம். ஆனால் திருப்பதி படக்குழுவினர் அதெல்லாம் எப்படி வருவாரு, சும்மா சொல்லிருப்பாரு என பேரரசுக்கு மாற்றி சொல்ல அவருக்கு கவலையாகி விட்டதாம். அஜித்திடம் இந்த விஷயத்தை கூற அவரும் நம்பாத மாதிரியே சிரித்துவிட்டு சென்றாராம்.
ஆனால் பூஜைக்கு முந்தின நாள் விஜயிடம் இருந்து கால் வந்திருக்கிறது. எத்தனை மணிக்கு பூஜை என கேட்டாராம் விஜய். பேரரசுவும் நேரத்தினை கூறி சரியென்று வைத்து விட்டாராம். இங்கு தான் இயக்குனருக்கு நம்பிக்கை முளைத்து இருக்கிறது. அடுத்தநாள் காலை பூஜைக்கு சொன்ன நேரத்தில் விஜய் தனது காரில் வந்து இறங்கினார். இதை பார்த்த அனைவருக்கும் ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்ததாம். அஜித்தே சற்று ஆடித்தான் போனாராம். அதை தொடர்ந்து பூஜையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்று வைரல் புகைப்படமாக உலா வருவது குறிப்பிடத்தக்கது.