LEO படத்தின் இசை வெளியீட்டு விழா.. ஆனால் இந்த முறை மதுரையில்! அதுவும் இந்த இடத்துலயா?

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்தது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய், லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான வினியோக பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தாமல் மதுரை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய விஜய் நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. புலி படத்தின் ரிலீஸ் சமயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் பல படங்களின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தாலும் விஜய் நடித்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா முதல்முறையாக நடக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.