கோட் டிக்கெட் அதிக விலைக்கு விக்காதீங்கன்னு விஜய் சொல்வாரா?!.. அமைதி காப்பாரா?..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். குறிப்பாக இளைஞர் கூட்டம் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரக உயர்ந்திருக்கிறார் விஜய்.
துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து வந்த விஜய் ஒருகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். நடனம், சண்டை காட்சிகளில் திறமை காட்டி மேலே வந்தார். இப்போது இவரின் திரைப்படம் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. கோட் படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில், விஜயின் சம்பளம் மட்டுமே 150 கோடிக்கும் மேல்.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் ‘100 கோடி’ படங்கள் இதுதான்!
கடந்த பல வருடங்களாகவே விஜய் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் டிக்கெட் கவுண்டரிலேயே அரசு நிர்ணயித்த விலையை விட மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இல்லையெனில், கவுண்டரில் டிக்கெட் கொடுக்காமல் விஜய் ரசிகர்கள் நேரிடையாக சில ஆயிரங்கள் விலை வைத்து விற்பார்கள்.
சில வெறித்தனமான விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு 5 ஆயிரம் கொடுத்து கூட ஒரு டிக்கெட்டை வாங்கி பார்ப்பார்கள். இதுபற்றி விஜய் ரசிகர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் மாட்டார்கள். தியேட்டர் நிர்வாகத்திற்கு எதிராக போராடவும் மாட்டர்கள் என்பதால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
விஜயும் இதுபற்றி எப்போதும் பேசமாட்டார். என் படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கக் கூடாது. கவுண்ட்டரில் அதிக விலைக்கு விற்கக்கூடாது என எப்போதுமே அவர் சொன்னது இல்லை. விஜய் படங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதால் முதல் நாள் வசூலை அள்ளவே தியேட்டர் அதிபர்கள் இப்படி செய்கிறார்கள்.
ஆனால், விஜய் இப்போது அரசியல்வாதி ஆகிவிட்டார். ‘பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க என சொல்லும் விஜய் டிக்கெட்டை அதிக விலைக்கு விக்காதீங்கன்னு சொல்லுவாரா? என சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிறைய மீம்ஸ்களும் வலம் வருகிறது.
கோட் படத்தின் ஆன்லைன் முன்பதிவு நேற்று துவங்கியது. இணையதளத்திற்கு சென்று பார்த்தால் டிக்கெட் விலை 500ஐ தாண்டுகிறது. ஏற்கனவே சிலர் இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்தனர். இத்தனை வருடங்களாக இதை சொல்லாத விஜய் இனிமேலாவது சொல்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!...