
Flashback
தெனாவெட்டாகப் பேசிய இயக்குனருக்குப் பதிலடி கொடுத்த விஜயகாந்த் படம்… இது சூப்பர் பிளாஷ்பேக்!
80களில் தமிழ்த்திரை உலகிற்கு ட்ரெண்ட்செட்டராக வெளியான படம் ஊமைவிழிகள். தமிழ்சினிமாவில் இன்றும் மறக்க முடியாத த்ரில்லர் படம். தமிழ்சினிமாவில் இந்தப் படம் வெளியாகும் முன்பு வரை கொலை செய்பவர் யார்? எதற்காகக் கொலை செய்கிறார் என்ற விவரம் தெரிய வரும். ஆனால் ஊமை விழிகள் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்த போதும் கொலை செய்பவர் யார்? எதற்காக கொலை செய்கிறார்? என்ற விவரத்தைத் தெளிவாக சொல்லாமலேயே ஒரு படத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வியுடன் வந்தது.
அதே நேரம் ரசிகர்களைக் கவர்ந்து ஆச்சரியப்படுத்தியது படம். இப்படத்தில் அமானுஷ்ய சூழலில் சொல்லப்படும் சூனியக்காரி பாட்டி, காலால் பள்ளம் தோண்டும் குதிரை, தனியாக தொங்கிக் கொண்டிருக்கும் வெண்கல மணியோசை, இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியின் பயணம் என அனைத்துமே பார்வையாளர்களுக்குத் திகில் ஊட்டியது. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியால் உருவான படம் இது.

oomai vizhigal
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்கள் இப்படி ஒரு படத்தை ஒன்றுகூடி எடுக்கக் காரணம் அவர்களை மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் நக்கலாகப் பேசியதுதான். ஆபாவாணன் சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாதவர்.
தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படித்துள்ளார். அவர் 3ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டு விழா நடந்தது. அதற்கு 80களில் கொடிகட்டிப் பறந்த ஒரு சிறப்பு இயக்குனர் கலந்து கொண்டாராம். அவர் பேச எழுந்தபோது மாணவர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருந்ததாம். ஆனால் அவரது தலைக்கனமான பேச்சு அவர்களை அப்செட் ஆக்கியதாம்.
கல்லூரியில் படிப்பதெல்லாம் வேஸ்ட். படிச்சிட்டு உங்களால படம் எடுக்க முடியுமா? எங்களைப் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேர்ந்தால் மட்டும்தான் எடுக்க முடியும்? ஏன் நீங்கள் படிச்சி உங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்றீங்கன்னு கேட்டாராம் அந்த இயக்குனர். இது அனைவருக்கும் கோபத்தையும், எதிர்ப்பையும் உண்டாக்கியதாம். அவரது வார்த்தையைப் பொய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி அங்குள்ள ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டதாம். இதற்கிடையில் ஆபாவாணன் ஊமை விழிகள் என்ற குறும்படத்தை எடுத்துக் காட்ட அது பெரும் வரவேற்பைப் பெற்றதாம்.
அந்தப் படத்தைத் தான் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்களாம். அதுவும் கமர்ஷியல் சக்சஸ் படமாக வர வேண்டும் என்பதில் ஆபாவாணன் உறுதியாக இருந்தாராம். படத்தில் அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதினாராம். மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர் எடுத்த படம்தான் ஊமைவிழிகள். விஜயகாந்த், கார்த்திக், பிரபு, அருண்பாண்டியன், சந்திரசேகர், சரிதா, ரவிச்சந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இப்ராகிம் ராவுத்தரிடம் ஆபாவாணன் பேசினார். கதையைக் கேட்டுள்ளார். பாடல்களைக் கேட்டுள்ளார். அதிலும் ‘நிலைமாறும் உலகில்’ பாடலில் வரும் ‘தினம் தோறும் உணவு, அது பகலில் தோன்றும் கனவு, கனவான நிலையில் புதுவாழ்வுக்கு எங்கே நினைவு’ என்ற வரிகளைக் கேட்டதும் இப்ராகிம் ராவுத்தருக்கு விஜயகாந்துடன் ஆரம்பத்தில் பயணித்து வந்த காலங்கள் நினைவுக்கு வந்ததாம். அந்த வரிகளுக்காகவே விஜயகாந்தை படத்தில் நடிக்க வைத்தாராம் ராவுத்தர். 1986ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் அரவிந்தராஜ். ஆபாவாணன் தயாரித்து இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.