எம்ஜிஆர், சிவாஜி இணைந்து தொடர்ந்து நடிக்காமல் போனது ஏன்? இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். அதே போல நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். இருவரும் இரு துருவங்கள்.
இவர்களுக்குப் பிறகு வந்த ரஜினி, கமல் மாதிரி என்றும், அஜீத், விஜய் மாதிரி என்றும் வைத்துக் கொள்ளலாம். இருவருக்குமே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தன. எம்ஜிஆர் படங்கள் வெளியானால் திரையரங்கே திருவிழா போல் ஆகிவிடும்.
பேனர், கட் அவுட், தோரணங்கள் கட்டி தொங்க விட்டு விடுவார்கள். அதற்குப் போட்டியாக சிவாஜி ரசிகர்களும் சிவாஜியின் படம் வெளியானதும் திரையரங்கில் கொண்டாடி விடுவார்கள்.
இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வெற்றி பெறும். சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன. இருதரப்பு ரசிகர்களுக்கு இடையேயும் கருத்து மோதல்கள் அவ்வப்போது நடக்கும். இது இயல்பான விஷயம் தான். ரஜினி, கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்கள் நல்ல நண்பர்கள். இருவரும் வெளிப்படையாகவே இதைத் தெரிவித்து ரசிகர்களுக்குள் மோதலைத் தவிர்த்தனர். இருவரும் தனித்தனியாக நடித்தால் தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்றதால் தான் கமலின் ஆலோசனையின் படி பிரிந்து நடித்தனர்.
ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் மோதல்கள் உருவாகிக் கொண்டே தான் இருந்தன. இங்கு எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்தப்படத்தில் சிவாஜி தான் வில்லன். இதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்க முடியாமல் போய் விட்டது.
இது ஏன்? இருவருமே நல்ல நடிகர்கள் தானே..என்ற கேள்வி எழலாம். அப்படி என்றால் என்ன நடந்திருக்கும்னு பார்க்கலாமா...
1950களில் எம்ஜிஆருக்கு பல மகத்தான வெற்றிப்படங்கள் வந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அபிமன்யு, மோகினி, மர்மயோகி ஆகிய படங்கள் சக்கை போடு போட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சர்வதிகாரி என்ற படத்தைத் தயாரித்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1952ல் அந்தமான் கைதி, என் தங்கை, குமாரி ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியைத் தந்தன. 1953ல் ஜெனோவா, நாம், பணக்காரி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. ஜெனோவா படத்தில் பி.எஸ்.சரோஜாவும், நாம் படத்தில் வி.என்.ஜானகியும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பைப் பெற்றனர்.
எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதும் இந்த வருடம் தான். இருவரும் இணைந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர். எம்ஜிஆர், கருணாநிதி, சக்கரபாணி, முரசொலி மாறன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள்.
நாம் படத்தை மேகலா பிக்சர்ஸ்சும், ஜூபிடர் பிக்சர்ஸ்சும் இணைந்து தயாரித்தன.
1954ல் மலைக்கள்ளன் படம் வெளியானது. இதில் புரட்சிகரமான ஒரு வேடத்தை ஏற்று நடித்திருந்தார் எம்ஜிஆர். இது மக்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டது. ஜனாதிபதி விருதும் பெற்றது. இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்தார்.
அதே வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் தான் கூண்டுக்கிளி. எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். இந்தப் படத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பரவலான விமர்சனத்தை உண்டாக்கியது.
இரு தரப்பினருக்கும் ஆங்காங்கே மோதலும் உருவானது. இதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர்.
இந்தப் படத்தை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மோதலை உருவாக்கினாலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.