Connect with us

Cinema History

திருப்பதி போன கணேசா திரும்பிப் போ… நடிகர் சிவாஜி கணேசனுக்கு நேர்ந்த அவமானம்…

தி.மு.கவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்…. ஆனால், ஆரம்ப காலத்தில் திராவிட இயக்கத்தில் பயணித்த சிவாஜி, திருப்பதி பயணத்தால் அதிலிருந்து வெளியேற வேண்டிய நிலை உருவாக்கிய சம்பவங்கள் தெரியுமா?

1952-ல் பராசக்தி வெளியான போது, தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் சிவாஜி கணேசன். அந்தப் படத்துக்கு வசனம் எழுதியது திராவிட இயக்கத்தில் இருந்த கருணாநிதி. இதனால், எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தின் அடையாளமாக மாறுவதற்கு முன்பே, அதன் வாய்ஸாக தமிழகத்தில் ஒலித்தவர் சிவாஜிதான். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட புயலுக்கு திராவிட இயக்கம் சார்பில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் நிவாரண நிதி தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார்.


அதேபோல், அதிகமான நிதி வசூலிப்போருக்கு அண்ணா கையால் மேடையில் மோதிரம் அணிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், சினிமா பிரபலங்கள் தொடங்கி, இயக்கத் தோழர்கள் வரையில் தீவிரமாகக் களமாடினார்கள். நடிகர் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் தனித்தனியாகத் தமிழகம் முழுவதும் சூறாவளியாகச் சுழன்று நிதி திரட்டினார்கள். சிவாஜிக்கு எம்.ஜி.ஆரை விட அதிகமான அளவு நிதி திரண்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் சேலத்தில் ஷூட்டிங்கில் இருந்த சிவாஜி, பொதுக்கூட்டம் நடக்கிற தேதியில் நாம் சென்னையில் இருக்க வேண்டும் என்று புறப்பட்டு வந்தார்.

இதையும் படிங்க: கலைஞர் சொன்ன ஒரு வார்த்தை….! அந்த படத்தில் நடிக்க மறுத்த கார்த்திக்…! அப்படி என்ன சொன்னாருனு தெரியுமா…

பொதுக்கூட்டம் தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேலாகியும் வீட்டில் இருந்த சிவாஜிக்கு பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு வரவில்லை. அதேபோல், அதிகமான நிதி திரட்டியதாக எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு கிடைத்ததோடு, அண்ணா கையால் மோதிரமும் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அடுத்த நாள் பத்திரிகைகளில் பெரிதாக செய்திகளும் வெளியானது. இது சிவாஜி மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவாஜி, பல நாட்கள் வெளியில் வராமல் அமைதி காத்தார். இதைக் கேள்விப்பட்ட இயக்குநர் பீம்சிங், சிவாஜியை அவரது வீட்டுக்கே போய் சந்தித்தார்.

அத்தோடு, கணேசா வா திருப்பதி கோயிலுக்குப் போய்ட்டு வரலாம். மனது கொஞ்சம் அமைதியடையும் என்று அழைத்தார். கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்த திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டு கோயிலுக்குப் போய்விட்டு வந்தால், என்ன சொல்வார்களோ என சிவாஜி தயங்கினார். ஒரு கட்டத்தில் பீம்சிங்கின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து காரில் திருப்பதி கிளம்பினார். அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்தது, எப்படியோ பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்தது.

சிவாஜி பற்றி செய்தி வெளியானதும் தமிழகத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அவரை எதிர்த்து திராவிட இயக்கத்தினரே சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கினர். `திருப்பதி போன கணேசா… திரும்பிப் போ’, `திருப்பதி கணேசா கோவிந்தா கோவிந்தா’ போன்ற வாசகங்களுடன் இருந்த சுவரொட்டிகள் தமிழகம் வந்த சிவாஜி கணேசனை வரவேற்றன. இதனால், மனம் நொந்துபோன சிவாஜி கணேசன், தனது வாழ்நாளின் இறுதிவரை திராவிட இயக்கங்களில் இருந்து விலகியே இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top