டிராகன் வசூலை ரெட்ரோ தாண்டுமா? படத்துக்கு ஓபனிங் எப்படி இருக்கும்?

dragon, retro
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படம் வரும் மே 1ல் திரைக்கு வருகிறது. அன்று தான் தொழிலாளர் தினம். அன்று தான் அஜித் பிறந்த நாள். அரசு விடுமுறை தினம். அது மட்டும் இல்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை. அதனால் இந்த கோடை விடுமுறையைக் குறி வைத்து களத்தில் குதிக்கிறது. நீண்ட காலமாக ஒரு தரமான வெற்றிப்படம் சூர்யாவுக்கு அமையவில்லை.
அதே நேரம் அவர் படத்துக்காக உடலை வருத்தி நடிக்கக்கூடியவர். கடைசியாக அவர் அப்படி நடித்த கங்குவா படம் பெரிய பில்டப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி படுதோல்வி யைச் சந்தித்தது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஹிட்டான படங்களை சமீப காலமாகக் கொடுத்து வருகிறார். அவரது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அதே நேரம் முதல் முறையாக சூர்யாவுடன் கைகோர்த்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது இது ஒரு லவ் ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படத்தில் ஜோதிகா தலையிடவில்லை. இன்னும் அவர் படத்தைப் பார்க்கவே இல்லை என்றும் சொல்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ், ஜார்ஜ் மரியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
சூர்யாவைப் பொருத்தவரை இப்போது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதே நேரம் அவரது முந்தைய படங்களின் தோல்வி இந்தப் படத்தைப் பாதிக்குமா? படத்தின் ஓபனிங் எப்படி இருக்கும்? டிராகன் வசூலைத் தாண்டுமா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சில தகவல்களைத் தந்துள்ளார்.

ரெட்ரோ படத்தைப் பொருத்த வரையில் அந்தப் படம் நல்ல படமாக அமைந்து அதற்கு நல்ல விமர்சனமாக அமைந்தால் நிச்சயமாக டிராகன் படத்தைத் தாண்டுவதற்கு அதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கு. பொதுவாக கதாநாயகர்களைப் பொருத்தவரைக்கும் அவர்களோட முந்தைய தோல்வி மிகப்பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஓரளவுக்குத்தான் பாதிக்கும். சூர்யாவைப் பொருத்தவரைக்கும் இன்னும் அவர் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிற பல ரசிகர்கள் இன்னும் இருக்காங்க. அந்த வகையில இந்தப் படத்துக்கு ஓப்பனிங் நிச்சயமா நல்லாவே இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன் என்கிறார் சித்ரா லட்சுமணன்.