எஜமான் படம் வெள்ளிவிழாவைக் கொண்டாட காரணமான அந்தக் கடிதம்...யார் எழுதியது தெரியுமா?
எஜமான் படம் ஏவிஎம்முக்கு கிடைத்தது எப்படி? அது வெள்ளிவிழா கொண்டாடியது எப்படி என்று ஏவிஎம் சரவணன் சொல்கிறார் பாருங்கள்.
இனி ஏவிஎம் படம் எல்லாம் ஓடாது என்று பேசப்பட்ட நேரத்தில் அதைத் தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பெருந்தன்மையுடன் எனக்கு ஒருமுறை போன் செய்தார்.
அப்போது எஸ்.பி.முத்துராமன் யூனிட்டுக்காக படம் எடுக்க ரஜினியைக் கேட்டுருக்கிறார்கள். அதற்கு ரஜினி ஏவிஎம்முடன் சேர்ந்து பண்ணலாமே என்று சொல்கிறார்.
இதை எஸ்.பி.முத்துராமன் என்னிடம் வந்து சொன்னார்.
எங்களுக்குத் தனியாக என்றால் தயாரிப்புச் செலவு கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். போனால் போகட்டும் என்று நினைப்போம். அதே போல விளம்பரமும் அதிகமாகச் செய்வோம்.
உங்களுக்காக நடிகர், நடிகையர் சம்பளத்தில் சலுகை தரக்கூடும். கூட்டாகப் படம் எடுத்து அந்தச் சலுகையை நாங்கள் பங்கு போடுவதில் அர்த்தமில்லை. உங்கள் யூனிட்டுக்காக நீங்கள் தனியாகப் படம் பண்ணுங்க. உங்கள் யூனிட்டில் உள்ள 20 பேருக்கு லாபத்தில் பங்கு கிடைக்கும். அதில் சேர எங்களுக்கு விருப்பமில்லை.
எஸ்.பி.முத்துராமனும், ரஜினியும் அதற்கு சம்மதித்தனர்.
திடீரென ஒருநாள் சார் நம்ம படத்தை எப்போ ரிலீஸ் பண்ணலாம்னு கேட்டார் ரஜினி.
என்ன படம் சார் சொல்றீங்கன்னு கேட்டேன். பூஜையே போடலியே என்றேன்.
ஆர்.வி.உதயகுமாரை வைத்துப் படம் எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணனும் என்றார் ரஜினி. அதற்கு நீங்க முதல்ல முத்துராமன் சாருக்குப் படம் பண்ணுங்க. சம்பளம் கூட அவர் பேசிவிட்டார். அதன் பிறகு நாம் படம் பண்ணலாம் என்றேன்.
ரஜினியும் இதற்கு ஒப்புக் கொண்டார். அதன்பிறகு வெளியானது தான் பாண்டியன். தொடர்ந்து வெளியானது தான் எங்களது எஜமான்.
அவுட்டேர் ஷ_ட்டிங்கிற்காக ஆந்திரா சென்றோம். சரியான திட்டமிடுதல் இல்லாததால் 25 லட்ச ரூபாய்க்கு என்று போடப்பட்ட செலவு 50 லட்சத்தைத் தாண்டியது. அப்போது இந்தியன் வங்கி சேர்மன் எம்.கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி பணத்தேவை அவசரம் என்றேன். அவரும் 22 லட்ச ரூபாய் கடன் தந்தார்.
முதலில் படம் கொஞ்சம் சூடுபிடிக்காமல் இருந்தது. ஆனால் படத்தில் சில தவறுகள் இருக்கத் தான் செய்தது. அதாவது எஜமான் காலடி பட்ட இடத்தில் வேறு ஒருவர் நடக்கமாட்டார்கள் என்று ஆரம்பக்காட்சியில் வரும். ஆனால் கிளைமாக்ஸில் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இதை ரசிகர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு திலகவதி என்ற ஒரு பெண் கடிதம் எழுதி அனுப்பினார்.
அதில் சார் எஜமான் வானவராயன் போல ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன் சார். சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்து கொண்டு திரும்பவும் முதலில் என் கணவனோடு பார்க்கும் படம் எஜமானாகத் தான் இருக்க வேண்டும்.
வெள்ளித்திரையில் அழியாகதையைப் படைத்து விட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்தி விட்ட திரு.உதயகுமார் அவர்களுக்கு வைரக்கிரீடம் தான் சூட்ட வேண்டும். இக்கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது உறுதி என்று இருந்தது.
அந்தக் கடிதத்தை அவர் அனுமதியுடன் படத்திற்கு விளம்பரப்படுத்தினோம். அதற்கு அப்புறம் எஜமான் பிக் அப் ஆனது. வெள்ளிவிழா கண்டது.