நிழல் உலகிலும் நிஜமாகும் விவாகரத்துக்கள் - ஒரு பார்வை
இன்றைய காலகட்டத்தில ஒட்டி உறவாடும் தம்பதிகளைப் பார்க்கப்போனால் வெகுசிலரைத் தான் பார்க்க முடிகிறது. பல தம்பதியர்கள் வேண்டா வெறுப்புடனே குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வெளியேயும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளும் வைக்க முடியாமல் ரெண்டும் கெட்டானாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். ஏதோ வாழ்ந்தோம் இருந்தோம் போனோம் என்பதாகத் தான் பலரது வாழ்க்கை ஒரு சுருங்கிய வட்டமாக மாறி விட்டது.
இப்போது சாதாரண மக்களைப் போல கூட இல்லாமல் நட்சத்திரத்தம்பதியரின் வாழ்க்கை சொல்ல முடியாத அளவில் சோகம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. ஆரம்பத்தில் அமோக வரவேற்புடன் தடபுடலாக நடைபெறும் திருமணம் சில காலங்களில் விவாகரத்தில் முடிந்து விடுகிறது.
இதற்கு காரணம் கருத்து வேறுபாடு என்று சொல்லி விடுகிறார்கள். இதில் முக்கிய பங்கு வகிப்பது ஈகோ தான். நீ பெரியவனா, நான் பெரியவளா என்கிற இந்த ஈகோ தான் அனைத்து மணமுறிவுகளுக்கும் பெரும்பாலும் காரணகர்த்தாவாகி விடுகிறது. அப்படிப்பட்ட நட்சத்திரத் தம்பதியர்களில் பலரை நாம் பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு சிலரை பார்க்கலாம்.
உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் வாணி கணபதியை 1978ல் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக கமல் சரிகா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004ல் மணமுறிவு ஏற்பட்டது.
திருமணம் விவாகரத்தில் தான் முடிந்துள்ளது. இவர்களுக்கு சுருதிஹாசன், அக்ஷரா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். அதன் பின்னர் லிவிங் டுகதர் முறைப்படி கவுதமியுடன் வாழ்ந்து வந்தார் கமல். இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016ல் பிரிவு ஏற்பட்டது.
ராமராஜன் நளினி திருமணம் 1987ல் நடைபெற்றது. இவர்களுக்குள் தம்பதியர் பிரிவு 2000ல் ஏற்பட்டது. இவர்களுக்கு அருண், அருணா என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சீதாவை 1990ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருந்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை. 2001ல் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். தற்போது சீதா டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகரும், வில்லனுமான பிரகாஷ்ராஜ் லலிதாவை 1994ல் மணந்து கொண்டார். இவர்களுக்குள் 2009ல் விவாகரத்து ஏற்பட்டது. மேகனா, பூஜா, சித்து ஆகியோர் இவரது பிள்ளைகள்.
நடிகர் தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் சோனியா அகர்வாலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. இவர்களுக்கு லீலாவதி, ஓம்கார், ரிஷிகேஷ் ஆகிய பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவருமே காதலித்து தான் திருமணம் செய்தனர். இவர்களுக்குள்ளும் பிரிவு உண்டாக கருத்து வேறுபாடு தான் காரணம். ஓடிடி விவாகரம் என்று சொல்கிறார்கள். அதாவது ஓடிடி தொடரில் நடித்துள்ள விதம் சமந்தாவின் கணவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. படுகவர்ச்சியாக சமந்தா படுக்கை அறைக்காட்சிகளில் நடித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவே அவர்களது பிரிவுக்கு இதுவும் ஒரு காரணமாம். அதேபோல் ஆடை வடிவமைப்பாளர் ஒருவருக்கும் சமந்தாவிற்குமான நட்பையும் நாகசைதன்யா விரும்பவில்லையாம். இதேபோல் நாகசைதன்யாவும் சில நடிகைகளுடன் நெருங்கி பழகியது சமந்தாவிற்கு பிடிக்கவில்லையாம். இதெல்லாம் சினிமா உலகில் சகஜம் தானப்பா என நம் மனதில் தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் நிழல் உலகம் கூட தகிடுதத்தோம் தான் ஆடுகிறது.
இப்போது கூட தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினருக்குள் உண்டான பிரிவு யாரும் எதிர்பார்க்காததுதான். 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதியர்களாகத் தான் வாழ்க்கை நடத்தி வந்தனர். இது இரு தரப்பினர் மத்தியிலும் பேரதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்பட வைத்துள்ளது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர். செல்வராகவன் கூட இதுகுறித்து டுவிட்டரில் சொன்ன தகவல் அனைவருக்கும் பொருந்தக்கூடியதுதான்.
வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது யாரும் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 2 நாட்கள் விட்டு விடுங்கள். அதன்பிறகு முடிவெடுங்கள். இதுபோன்ற நேரங்களில் நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் சகல வசதிகளுடன் 150 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டி வருகிறாராம். மாமனார் ரஜினிக்கும் தனுஷிற்கும் வீடு கட்டுவதில் இருந்தே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர ஐஸ்வர்யா தனியாக பிரபலங்களுக்கு என யோகா கிளாஸ் எடுத்து வருமானத்தை ஈட்டியதும் தனுஷிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுதவிர தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் படுக்கை அறை காட்சிகள், லிப் லாக் என காட்சிகளில் தாராளமாக நடித்ததும் காரணம் என்கிறார்கள். தனுஷ் பால் நடிகை மீது கொண்ட காதலும் இதற்கு காரணம் என்கிறார்கள். எது தான் உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் இதுபோன்ற சிறு சிறு காரணங்கள் தான் பின்னாளில் மனஉளைச்சலுக்குள் ஆளாக்கி பலத்த எதிர்விளைவை உண்டுபண்ணுகின்றன என்பது மட்டும் நிஜம். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார். இப்போது 2வது மகள் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துள்ளார். இதைப் பார்க்கும் போது பெரும் பிரபலங்களுக்கே இந்தக் கதியா எனத் தான் கேட்கத் தோன்றுகிறது.