மறக்க முடியுமா குஷ்பூவின் சரித்திரத்தை...?
தமிழ்சினிமா உலகில் மறக்க முடியாத காலடியை அழுத்தமாக பதித்தவர் குஷ்பூ. இவரது படங்கள் வந்து விட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
படங்களில் அவரது நடிப்பும் சரி. டான்ஸ_ம் சரி. அவர் பேசும் டயலாக்குகளும் சரி. ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கச் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது முகமே வசீகரமானது.
அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் கூட (அப்போது குஷ்பூ தமிழ்த்திரையுலகில் உச்சக்கட்டத்தில் கொடி கட்டி பறந்த காலகட்டம்) அவரது பெயரை வைத்தே பாடல் வந்திருக்கும்.
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ....குஷ்பூ என்ற அந்த பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து குஷ்;பூ போடும் ஆட்டத்தை இன்றளவிலும் கூட யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
இவருக்கு இன்று பிறந்தநாள். 29.9.1970ல் மும்பையில் நக்கர்த் கான் என்ற இயற்பெயருடன் பிறந்தார்.
1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வரத் தொடங்கினார். 1989ல் வருஷம் 16 படத்தில் தான் முதலில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1990ல் தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். அப்போது இவர் இணைந்து நடிக்காத நாயகர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு படுபிசி. கமல், ரஜினி, விஜய்காந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என முன்னணி வரிசை ஹீரோக்கள் படங்களில் எல்லாம் நடித்து விட்டார்.
1990 களில் தமிழ்சினிமா மட்டுமின்றி கன்னடம், மலையாளம் பட உலகிலும் குஷ்பூ தடம் பதிக்க ஆரம்பித்து விட்டார்.
பிரபுவுடன் காதல் என்று சர்ச்சையில் சிக்கி இருந்த குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி.யுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இருபிள்ளைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம் இடைவெளி விட்டு இருந்த குஷ்பூ குணச்சித்திர வேடங்களில் தலையைக் காட்டி வருகிறார். இதற்கிடையே டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது பருமாக இருந்த உடற்கட்டை மெலிய வைத்து பழைய குஷ்பூவாக மாறி உள்ளார்.
கணவர் சுந்தர் சி.யின் படங்களை அவ்னி சினிமாக்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து விட்டார்.
மொத்தத்தில் தற்போது தான் ரொம்ப பிசியாக உள்ளார் குஷ்பூ. நடிகை, தயாரிப்பாளர், அரசியல் வாதி, டிவி தொகுப்பாளர் என பல பரிமாணங்களில் காட்சி அளிக்கிறார்.
இவர் நடித்த படங்களில் தர்மத்தின் தலைவன், நாட்டுக்கு ஒரு நல்லவன், பாண்டியன், அண்ணாமலை, மன்னன் ஆகிய படங்களில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
கமலுடன் வெற்றி விழா, சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
பிரபுவுடன் தாலாட்டு பாடவா, மை டியர் மார்த்தாண்டன், சின்ன தம்பி ஆகிய படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.
கார்த்திக்குடன் கிழக்கு வாசல், வருஷம் 16 , இது நம்ம பூமி படங்கள் நடித்தார். பாக்யராஜுடன் அம்மா வந்தாச்சு படத்தில் நடித்தார். சத்யராஜூடன் ரிக்ஷா மாமா, பிரம்மா, நடிகன் படங்களில் நடித்தார். சரத்குமாருடன் நாட்டாமை, வேடன், சிம்மராசி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் உடன் மின்சார கண்ணா, வில்லு படங்களில்நடித்தார். விஜயகாந்துடன் வீரம் வெளஞ்ச மண்ணு படத்தில் நடித்தார். நெப்போலியனுடன் எட்டுப்பட்டடி ராசாவில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
வீரத்தாலாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வீர நடை படங்களில் இவர் போடும் ஆட்டம் மறக்க முடியாதவை.
விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கோபாலா கோபாலா, பொண்ணு விளையற பூமி, வெற்றி வேல் சக்தி வேல், மனைவிக்கு மரியாதை ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட குஷ்பூவைப் பார்க்கலாம். பெரியார் படத்தில் நடித்த மாறுபட்ட குஷ்பூவை யாராலும் இன்று வரை நடிக்க முடியாது.
ஸ்ரீபண்ணாரி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் குஷ்பூ தாய்க்குலங்களைக் கொள்ளை கொண்டார்.
பொன்னர் சங்கர், தீயா வேலை செய்யணும் குமாரு படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் குஷ்பூவிற்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.