Cinema History
முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!
80களில் இருந்தே சினிமாவில் ஹீரோக்கள் அதிக வசனம் பேசி நடிப்பதெல்லாம் குறைந்துபோனது. அதுவும் பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் படங்களில் ஹீரோக்களுக்கு குறைவான வசனம்தான் இருந்தது. ஆனால், சினிமா துவங்கிய 1935 முதல் 70 வரை அப்படி இல்லை. ஹீரோக்கள் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள்.
அதற்கு காரணம் நாடகங்களிலுருந்து சினிமா உருவானதுதான். பெரும்பாலும் நாடக நடிகர்கள்தான் சினிமாவிலும் நடித்தனர். அதேபோல், நாடகங்களை இயக்கிய பலரும் சினிமாவிலும் இயக்குனராக மாறினார்கள். காட்சி மூலம் சொல்வதை விட எல்லாவற்றையும் வசனங்களிலேயே சொல்ல வேண்டும் என்பதுதான் அப்போது படமெடுக்கும் முறையாக இருந்தது.
இதையும் படிங்க: சிறு குழந்தைகளாகவே மாறிய எம்ஜிஆர் – சிவாஜி: அந்த கால நடிகர் சங்கத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள்!
எம்.ஜி.அர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா என எல்லாருமே அப்படித்தான். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்கள். 50களில் பெரும்பாலும் சரித்திர திரைப்படங்களே அதிகம் உருவானது. எனவே, வசனகர்த்தாக்கள் பக்கம் பக்கமாக வசனம் எழுதுவார்கள். ஹீரோக்களும் அந்த வசனங்களை மனப்பாடம் செய்து தம் கட்டி உணர்ச்சி மிக்க பேசுவார்கள்.
சிவாஜியும் அப்படி பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படமான பராசக்தியே வசனங்களால்தான் வெற்றி பெற்றது. கலைஞர் கருணாநிதியின் வசனங்களை அற்புதமாக பேசி நடித்திருப்பார் நடிகர் திலகம். சினிமாவில் நாடகம் போல் இல்லாமல் வசனங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பார்கள். தப்பாக பேசினாலும் மீண்டும் பேசிக்கொள்ளலாம். சினிமாவில் அது பெரிய பிளஸ் பாயிண்ட்.
இதையும் படிங்க: சிவாஜியும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே படம்! 34 ஆண்டுகள் ஆகியும் மனதில் நிற்க காரணமே இதுதான்!
ஒருகட்டத்தில் ஒரே டேக்கில் காட்சியை எடுக்கும் பழக்கமும் இயக்குனர்களுக்கு வந்தது. ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட நடிகர் வசனங்களை மறக்காமல் பேசி நடிக்க வேண்டும். இல்லையேல் தயாரிப்பாளருக்கு பட்ஜெட் அதிகரிக்கும். ஏனெனில் இப்போது போல அப்போது டிஜிட்டல் பிலிம் இல்லை. ஒரு காட்சி எவ்வளவு அடி என்பதுதான் கணக்கு.
பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, பத்மினி ஆகியோர் நடித்து 1956ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ராஜா ராணி. இப்படத்திற்கு கதை, வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதியிருந்தார். இந்த படத்தில் ‘சேரன் செங்குட்டவன்’ என்கிற ஒரு நாடகம் நடக்கும். அதில், சிவாஜி நடிப்பது போல காட்சி. அதில் சிவாஜி பேசும் வசனத்தை சிங்கிள் ஷாட்டில் எடுக்க பீம்சிங் திட்டமிட்டார். ஆனால், சிவாஜி இதற்கு சம்மதிப்பாரா என்பது அவரின் சந்தேகம். ஏனெனில் அது 850 அடி பிலிம் ரோல் எடுக்கும்.
ஆனால், சிவாஜியோ பீம்சிங்கிடம் ‘நான் அந்த வசனங்களை பேசி நடிக்கிறேன். நீங்கள் ஒரே டேக்கில் எடுக்கும் வேலையை பாருங்கள்’ என சொல்ல அந்த காட்சி படமானது. சொன்ன மாதிரியே கலைஞர் எழுதி வசனங்களை அழகாக பேசி நடித்தார் சிவாஜி. அவர் நடித்து முடித்ததும் அங்கிருந்த எல்லோரும் கைத்தட்டி அவரை பாராட்டியுள்ளனர். சினிமா உலகில் 850 அடி பிலிம் ரோலுக்கு ஒரே டேக்கில் வசனம் பேசி நடித்த ஒரே நடிகர் சிவாஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!