Connect with us

latest news

இருந்ததே 9நாள்தான்.. அதிலும் கடைசி நாள் லேட்டா வந்த ரஜினி.. இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?

மாங்குடி மைனர்: ரஜினி வில்லனாகவும் விஜயகுமார் ஹீரோவாகவும் நடித்த படம்தான் மாங்குடி மைனர். இந்தப் படத்தின் இயக்குனர் விசி குகநாதன். இந்தப் படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை குக நாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதோ அந்த விவரம்: மாங்குடி மைனர் திரைப்படம் ஹிந்தியில் வந்த திரைப்படம். அதனுடைய ரைட்சை வாங்கி முதலில் முத்துராமன், ஜெயசித்ரா இவர்களை வைத்துதான் படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதில் தேவராஜ் மோகனை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறேன். இந்த படம் எடுத்த வரைக்கும் அதனுடைய கேரக்டர் எனக்கு சரியாக வரவில்லை. அப்படியே டிராப் செய்தேன். அந்தக் கதை என்னிடத்தில் இருக்கும்பொழுது தான் ரஜினி என் மனதிற்குள் வருகிறார். அவருடைய ஆக்சன் காட்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது சத்ரு சின்கா மாதிரியே இருந்தது.

பிடித்த ரோல்: அதனால் ரஜினியை இந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் ரஜினியை தேடி போனேன் .அவர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் புவனா ஒரு கேள்விக்குறி ஷூட்டிங்கில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நான் போனதும் அங்கே இருந்தவர்கள் ரஜினியை எழுப்பி விட்டார்கள் .அதன் பிறகு என்னிடம் வந்து பேசினார். அப்போது ரஜினி கூறும் பொழுது ‘நான் பயங்கர பிசியாக இருக்கிறேன். ஆனால் அந்த ரோல் எனக்கு மிகவும் பிடித்த ரோல். நான் செய்வேன். ஆனால் என்னிடம் கால் ஷீட் இல்லையே’ என்று கூறினார்.

மொத்தமே 17 நாள்தான்: சரி உங்களிடம் எத்தனை நாள் டேட்ஸ் இருக்கிறது என்று குகநாதன் கேட்க 17 நாட்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்த 17 நாட்களையும் நான் வாங்கி விட்டேன். உடனே இந்த படத்தில் அதற்கான கேரக்டர் எல்லாவற்றையும் உருவாக்கி படத்தை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன் .படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன். இவர் கொடுத்த 17 நாட்களில் மொத்த படத்தையும் முடித்தாக வேண்டும். ஆனால் ஷூட்டிங் கிளம்புற நேரத்தில் எல்லாம் நினைத்த மாதிரி அமையவில்லை .அதில் ரஜினி கொடுத்த முதல் 8 நாளை என்னால் பயன்படுத்த முடியவில்லை.

ஸ்ரீதர் வைத்த ட்விஸ்ட்: உடனே ரஜினி என்னை அழைத்து இதை இப்படியே விட்டு விடலாம். அடுத்து புதுசாக ஒரு படத்தில் நான் நடித்துக் கொடுக்கிறேன் என கூறினார். ஆனால் நான் ஒரே பிடிவாதமாக இந்த ஒன்பது நாட்கள் எனக்கு கொடுங்கள். நான் படத்தை முடித்து விடுகிறேன் எனக் கூறினேன் .ஆனால் ரஜினிக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சம்பளத்தை பேசி பணத்தை கொடுத்து விட்டேன். உடனே ரஜினி ஹைதராபாத்துக்கு வந்து விட்டார். முதல் மூன்று நாள் ஷூட்டிங்கை முடித்து விட்டார் .இரவு பகலாக நடந்தது ஷூட்டிங். நாலாவது நாள் ஆனவுடன் சென்னையில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.

ஒரு வருடத்தில் 16 படமா?: பேசுவது இயக்குனர் ஸ்ரீதர் .அவருடைய பெரிய ரசிகன் நான். அவர் ‘நான் இப்பொழுது ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான காட்சி எடுக்க வேண்டும். அதனால் ரஜினி இங்கே வர வேண்டும்.. அவரை வைத்து எடுத்து விட்டால் இந்த படத்தை நான் ரிலீஸ் செய்து விடுவேன். அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஒரு மூன்று நாள் எனக்கு விட்டுக்கொடு. நான் ரஜினியை வைத்து எடுத்து முடித்து அனுப்பி விடுகிறேன் ’ என என்னிடம் கூறினார். நான் உடனே இதை ரஜினியிடம் சொன்னேன். உடனே ரஜினி ஐய்யோ இந்த வருடத்தில் 16 படம் எனக்கு இருக்கிறது எனக் கூறினார்.

இரவு பகலா சூட்டிங்: இருந்தாலும் ஸ்ரீதர் சார் கேட்டுவிட்டாரே என்ன பண்ணலாம் என யோசித்தேன். ஆனாலும் ரஜினி இதற்கு நான் பொறுப்பு இல்லை. நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் கொஞ்சம் யோசித்தேன். ஹைதராபாத்தில் இருந்து மாலை 6 மணிக்கு சென்னைக்கு ஒரு பிளைட் இருந்தது. அதே மாதிரி மறுநாள் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பிளைட் இருந்தது .அதனால் ஸ்ரீதர் சாருக்கு போன் செய்து 3 இரவு வேண்டுமென்றால் விட்டுக் கொடுக்கிறேன் என கூறினேன் .ஆனால் ஸ்ரீதர் நான்கு நாள் இரவு கொடுங்கள் என கேட்டார்.

சரி இருக்கட்டும் என 4 நாள் இரவை நான் விட்டுக் கொடுத்தேன். அங்கு இரவில் ஷூட்டிங் முடித்துவிட்டு காலையில் இங்கு ரஜினி நடித்துக் கொடுப்பார். இப்படியே மூன்று நாட்கள் போனது .கடைசி நான்காவது நாளில் பிளைட் தாமதமானதால் காலையில் அவர் வர லேட் ஆகிவிட்டது .அவர் வரும் நேரத்தில் பெரும் கோபத்தில் நான் இருந்தேன் .அவர் வருவதை அறிந்து துண்டை எடுத்து என் முகத்தை மூடி அப்படியே சாய்ந்து கொண்டேன். என்னருகில் ரஜினி வந்து எதுவும் பேசாமல் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரம் கழித்து என் கையை மெதுவாக தொட்டார். அவர் தொட்டதும் அந்த ஒரு நிமிடம் என் மனதிற்குள் பிளைட்டு தானே தாமதமானது. இவரா வேண்டுமென்று லேட்டாக வந்தார் ?என பல எண்ணங்கள் ஓடி என் கோபத்தை எல்லாம் குறைத்தது. அதன் பிறகு அவரை அழைத்து வாருங்கள் சீக்கிரம் மீதி இருக்கும் ஷாட்டை எடுத்து முடித்து விடலாம் என்று கூறி அந்த மொத்த படத்தையும் முடித்து படம் பெரிய ஹிட் என படத்தின் இயக்குனர் விசி குகநாதன் ஒரு பேட்டியில் கூறினார்

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top