தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில், பிரம்மாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். பாகுபலி எடுத்த பின்புதான் ராஜமௌலியை பிரம்மாண்ட இயக்குனராக பலரும் பார்க்கிறர்கள். ஆனால் அதற்கு பல வருடங்களுக்கு முன்பே கிராபிக்ஸ் காட்சிகள் கலந்த ஃபேண்டஸி படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானவர்தான் ஷங்கர்.
இவர் இயக்கிய காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதேநேரம் அவர் இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது. எனவே தனது அடுத்த படத்தை ஷங்கர் இதுவரை துவங்காமல் இருந்தார்.
இந்தியன் 3 படத்தில் சில காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பல சிக்கல்களால் அது இன்னும் துவங்கப்படாமல் இருக்கிறது. ஒரு பக்கம் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதிலிருந்து சில காட்சிகளை சில இயக்குனர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தினார்கள். அப்படி யாரும் பயன்படுத்த வேண்டாம் என ஷங்கர் கோரிக்கையும் வைத்தார். ஆனால் யாரும் கேட்பதாக தெரியவில்லை. காந்தாரா 2 படத்தில் கூட வேள்பாரி நாவலில் இடம்பெற்ற ஒரு காட்சி இருந்ததாக சொல்லப்பட்டது.
இதற்குமேல் விட்டால் முழு படத்தை எடுத்து விடுவார்கள் என யோசித்த ஷங்கர் விரைவில் வேள்பாரி படத்தின் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டிருக்கிறாராம். அதற்கான பணிகள் தற்போது துவங்கியிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 2026 ஜூன் மாதம் வேள்பாரி ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள். அனேகமாக கோலிவுட்டில் இருந்து ஒரு பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார் என்கிறார்கள்.
சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, சியான் விகரம் என பல பெயரும் இதில் அடிபடுகிறது.வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். எனவே, பல கோடி செலவாகும் நிலையில் யார் தயாரிப்பாளர் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அநேகமாக பாலிவுட்டிலிருந்து ஒரு தயாரிப்பாளரை ஷங்கர் கொண்டு வருவார் என்கிறார்கள்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


