மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி கைதி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் ஒரு இரவில் கதை நடப்பது போல பரபர ஆக்‌ஷன் திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார் லோகேஷ். இந்த படம் இளைஞர்களை மிகவும் கவர அவர்களுக்கு பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறினார். அடுத்தடுத்து விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் மாறினார் லோகேஷ்.

ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கினார். இந்த படம் நன்றாக இருந்தாலும் பேன் இண்டியா அளவில் பெரிய வசூலை பெறவில்லை. கூலிக்கு பின் ரஜினி-கமல் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார் லோகேஷ். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை.

கைதி 2-வுக்காக கார்த்தி பல வருடங்களாகவே காத்திருக்கிறார். ஆனால் இன்னமும் அதற்கான கதை, திரைக்கதையை லோகேஷ் எழுதவில்லை என்கிறார்கள். ரஜினி-கமல் படம் டேக் ஆப் ஆகாததால் அடுத்து கைதி 2 படத்தைதான் லோகேஷ் இயக்குவார் என செய்திகள் வெளியானது. சமீபத்தில் லோகேஷ் தனது உதவியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகிய வைரலானது.

இந்நிலையில்தான் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லி ஓகே செய்திருக்கிறாராம் லோகேஷ். இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் 2026ம் வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் என தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

கைதி படத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கைதி 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் லோகேஷ் கனகராஜ் பெரிய நடிகர்களின் பின்னாலேயே அழைகிறார் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். லோகேஷ் கனகராஜை நம்பிய முதல் பெரிய ஹீரோ கார்த்திதான். அப்படி வாழ்க்கை கொடுத்த கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்காமல் தமாதம் செய்துகொண்டே வருகிறார் என பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *