Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்திருக்கும் விஜய் இந்த முறை எப்படியாவது திமுக ஆட்சியை அகற்றிட வேண்டும் என்கிற முடிவுடன் செயல்பட்டு வருகிறார். எனவே பேசும் மேடைகளில் எல்லாம் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
கடந்த 13ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் முன்பு பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜய். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அவர் கரூர் சென்றபோது அங்கு கூட்ட நெரிச்சல் ஏற்பட்டு 40 பேர் வரை மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் விஜயை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜயின் ஆதரவாளர்களோ ‘இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே காரணம். போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. இது கரூரில் நடந்த திட்டமிட்ட சதி’ என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
விஜய் நடிகராக இருந்தபோதே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்கிற அமைப்பாக மாற்றி அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரின் மக்கள் இயக்க நிர்வாகிகள் தற்போது தவெகவின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். விஜய் எப்போதும் தன்னை ஒரு நடிகராகவே உணர்கிறார். அவரை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தை தனது சினிமா படத்தை பார்க்க வரும் கூட்டமாகவே பார்க்கிறார். தனது ரசிகர்களை இன்னும் அவர் அரசியல்படுத்தவில்லை. இன்னும் ரசிக மனப்பான்மையுடன் விஜயை பார்ப்பதற்காகவே இவர்கள் போகிறார்கள் என்றெல்லாம் விஜய் மீதும், அவரின் ரசிகர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பலரும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழில் பல படங்களில் நடித்தவரும், சர்கார் படத்தில் விஜயுடன் ஒரு காட்சியில் நடித்தவருமான ஆறு பாலா ஊடகம் ஒன்றில் பேசிய போது ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார். சர்கார் பட ஷூட்டிங்கில் நான் விஜய் சாரோட நடித்தபோது ‘நான் அரசியலுக்கு செட் ஆவேனா?’ என என்னிடம் கேட்டார். நான் சிரித்தபடி ‘நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க’ என சொன்னேன்.
ஒரு நிமிடம் என் முகத்தை உற்று பார்த்துவிட்டு ‘ஏன் இப்படி சொல்றீங்க?’ என கேட்டார். உங்க மேல எந்த வழக்கும் இல்லை. கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்க மெடிக்கல் காலேஜ் உங்ககிட்ட இல்ல.. உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆளும் இல்லை.. இது எதுவுமே உங்ககிட்ட இல்லாம நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க’ என சொன்னேன். லேசா சிரிச்சிட்டு ‘மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவையில்லை நண்பா’ என்ன சொன்னார். அவர் மிகவும் சென்சிடிவான மனிதர். கரூர் நிகழ்வு அவரின் மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கும். மிகவும் கவலையில் இருப்பார்’ என பேசி இருக்கிறார்.
