ரஜினி 75:
ரஜினி இன்று அவருடைய 75 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாள் என்பது ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்டமாகத்தான் ஒவ்வொரு வருடமும் இருந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணம், ரசிகர்களின் கொண்டாட்டம் இது எல்லாமே அவரது சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டது. ரசிகர்கள் பெரும்பாலும் ரஜினிகாந்த் பிறந்த நாளின் போது இரத்த தானம் கொடுப்பது, கண் தானம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது எளிமையான தோற்றம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழக மட்டுமல்லாமல் உலக அளவில் ரஜினிகாந்த் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரஜினிகாந்த் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெற்றி கண்டவர். அவருடைய கருப்பு நிறமே வசீகரம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
இன்று அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தாலும் நேற்று இரவிலிருந்தே ரசிகர்கள் ரஜினி வீட்டிற்கு வெளியே திரண்டு விட்டனர். இனிப்புகள் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் வெளியே வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தலைவரிடமும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் பாதுகாப்பாக செல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். ரஜினியின் இத்தனை ஆண்டு பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் லதா ரஜினிகாந்த். ரஜினியின் வெற்றி தோல்விகளை , அவர் பட்ட கஷ்டங்கள், போராட்டங்கள் என எல்லாவற்றையும் கூட இருந்து பார்த்தவர் லதா ரஜினிகாந்த்.
பக்கபலமாக இருந்த மனைவி:
ரஜினியின் பக்கபலமாக இன்று வரை இருந்து வருகிறார் லதா ரஜினிகாந்த். ரஜினிக்கு ஆரம்பகாலங்கள் எவ்வளவோ கெட்டப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. அதை பொறுமையாக கையாண்டு இன்று உலகமே போற்றத்தக்க மனிதராக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு லதா ரஜினிகாந்தின் பொறுமையும் ஒரு காரணம். இவர்களுடைய திருமணம் ஒரு காதல் திருமணம் என அனைவருக்குமே தெரியும்.

லதா ரஜினிகாந்துக்கு முன் ரஜினியின் வாழ்க்கையில் சில மோசமான சம்பவங்களும் நடந்திருக்கிறது. அதையெல்லாம் கடந்து வரும் போதுதான் லதாவை சந்தித்திருக்கிறார் ரஜினி. முதல் சந்திப்பிலேயே இவர்தான் தன் மனைவியாக வேண்டும் என ரஜினி நினைத்திருக்கிறார். இவர்களுடைய திருமணத்திற்கு ரஜினியின் சகோதரர் முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை பற்றி ஒரு பத்திரிக்கையில் ரஜினி கூறியிருக்கிறார்.
பொல்லாதவன் படப்பிடிப்பிற்காக ரஜினி மைசூர் சென்ற போது அங்கு தன் சகோதரரை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது லதா ரஜினிகாந்தை பற்றி ரஜினி கூற, மராத்தில கிடைக்காத பொண்ணா? மதராஸில கிடைச்சிட போகுது என அவரது சகோதரர் சொல்லியிருக்கிறார். நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் லதாவை திருமணம் செய்து வையுங்கள் என தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாராம் ரஜினி. அவர் அன்று எடுத்த முடிவு சரியானதுதான் என இப்போது அவரது அண்ணனுக்கு தெரிந்திருக்கும்.
