சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது 1960 களிலிருந்தே தொடர்கிறது. அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் இணைந்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் திமுகவில் எம்எல்ஏ ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். எம்ஜிஆர் கூட பல வருடங்கள் திமுகவில் இருந்துவிட்டுதான் அதிமுகவை தொடங்கினார். ஆனால் எம்ஜிஆருக்கு பின் அரசியல் கட்சி துவங்கியவர்கள் பெரிதாக அரசியலில் சாதிக்கவில்லை. சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.
இந்த லிஸ்டில் விஜயகாந்த் மட்டுமே அரசியலில் ஓரளவுக்கு சாதித்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். மற்றவர்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டை கூட வாங்க முடியவில்லை. சினிமா நடிகர்களுக்கும், மக்களுக்கான இடையே பெரிய இடைவெளி இருக்கும். அவர்கள் மக்களோடு மக்களாக இறங்கி பழக மாட்டார்கள். அவர்களின் கால்கள் எப்போது ஆகாயத்தில் இருக்கும். நடிகர் விஜய் கூட தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். ஆனால் அவர் வேனில் இருந்து பிரச்சாரம் செய்து விட்டு சென்று விடுகிறாரே தவிர களத்தில் நிற்கவில்லை.

நடிகர்கள் அப்படித்தான் சொகுசாக வளர்வார்கள். அரசியலுக்கு வர வேண்டுமெனில் மக்கள் பிரச்சினைகளை பேசி களத்தில் அவர்களுக்காக நிற்க வேண்டும். பல வருடங்கள் சமூக சேவை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மக்களே அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் வீட்டிலிருந்து நேராக கோட்டைக்கு போய்விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அரசியலில் படிப்படியாக வளராமல் ஒரே தேர்தலில் முதலமைச்சராகி விட வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஜெயமணி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்ஜிஆர்ய்க்கு அப்புறம் அரசியலில் எந்த நடிகராலும் பெருசாக வர முடியவில்லை. எம்ஜிஆர் மக்களோடு மக்களாக இருந்தார். அவருக்கு பின் கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகர்களுக்கு அவ்வளவு செஞ்சார்..
ஆனா இப்ப இருக்க விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும்.. எவனும் லாயக்கில்லை.. கேரியரை கொண்டு போய் கேரவானில் தனியா தின்னுட்டு எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. முதல்ல சினிமாவில் இருக்கவங்கள ஒழுங்கா பாத்துக்க.. அப்புறம் நீ மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வா’ என பொங்கி இருக்கிறார்.
இதே ஜெயமணிதான் சில மாதங்களுக்கு முன் ‘ஒரு நடிகர் இருக்கிறார்.. ரொம்ப பெரிய ஹீரோ. நான் நேராவே பார்த்திருக்கேன்.. நாங்க ஷாட் முடிஞ்சு உட்கார்ந்து இருந்தோம். அப்போது அந்த நடிகரை பார்க்க ரசிகர்கள் வந்தாங்க.. உடனே பவுன்சர்களை கூப்பிட்டு அவங்களை அடிச்சி விரட்டுங்கன்னு சொன்னாரு. ஆனா அந்த ரசிகர்கள் அவர் பக்கத்தில் வந்தவுடனே ‘வாங்க போட்டோ எடுத்துக்கலாம்’னு சொன்னாரு.. அப்படியே நடிப்பாங்க.. அவர் சிஎம் ஆகவும் ஆசைப்படுறாரு’ என சொல்லியிருந்தார்.
