தனுஷுடன் நடித்தேன்.. பீரியட் என சொல்லியும் விட வில்லை!.. பார்வதி பகீர்!….

Published On: January 12, 2026
parvathy
---Advertisement---

சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் வாய்ப்பு தேடி அலையும்போதும், சினிமாவில் நடிக்கும் போதும் பாலியல் தொந்தரவுகளை, பாலியல் சீண்டல்களை சந்திப்பது பல வருடங்களாகவே நடந்து வருகிறது. குறிப்பாக வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என கேட்பது சினிமா உலகில் சகஜமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வாய்ப்புக்காக வெகு சிலரே அதற்கு சம்மதம் சொன்னாலும் திறமையால் சினிமாவில் நுழைந்து எல்லாவற்றையும் சமாளித்து முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளும் இருக்கிறார்கள்.. அதேபோல் ‘படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு என்றால் எனக்கு சினிமாவே வேண்டாம்’ என்று சென்ற பல பெண்களும் இங்கே இருக்கிறார்கள்.

சினிமாவில் வரும் பாலியல் தொந்தரவு பற்றி வெளியே சொன்னால் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்பதாலேயே பல பெண்கள் அதை வெளியே சொல்லாமல் மறைப்பது உண்டு. ஆனால் பாடகி சின்மயி சில வருடங்களுக்கு முன்பு Me too என்கிற ஹேஷ்டேக்கில் இதுபற்றி தொடர்ந்து பேச பலரும் தைரியமாக முன் வந்து தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை பேசினார்கள். பாலியல் பிரச்சனை மட்டுமல்ல.. திரைத்துறையில் வேறு சில பிரச்சனைகளையும் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். தற்போது பல பெண்களும், நடிகைகளும் இதுபற்றி வெளிப்படையாக பேச துவங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், மலையாளத்தில் முக்கிய நடிகையாகவும், தமிழில் சில படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘மரியான் படத்தில் தனுசுடன் நடித்தேன். தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி ஒரு பாடல் காட்சியை எடுத்தார்கள். மாற்று உடையும் கொண்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் உடைமாற்ற ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன்.. ஆனால் அனுமதி மறுத்தார்கள்..

எனக்கு பீரியட் என்றும் நான் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றும் சத்தமாக சொன்னேன்.. படப்பிடிப்பு தளத்தில் என்னைச் சேர்த்து மொத்தம் மூன்று பெண்கள் மட்டுமே இருந்தனர்.. என் தேவைகளை கவனித்துக் கொள்ளவும், எனக்கு ஆதரவாக பேசவும் அங்கு யாருமே இல்லை’ என்று பகீர் தகவலை சொல்லியிருக்கிறார்.