ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கியதால் கடந்த 9ம் தேதி வெளியாகவில்லை. ஏற்கனவே தணிக்கை செய்து யூஏ சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் மறு தணிக்கை என சொன்னதால் அதிருப்தியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக முதலில் தீர்ப்பு சொல்லி சென்சார் சான்றிதழை கொடுக்க சொல்லி உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து சென்சார் போர்ட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இந்த வழக்கு நடக்கலாம் என சொல்லிய நீதிபதிகள் வருகிற 20ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனவே, இனிமேல் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடக்கும் எனத்தெரிகிறது.
பொங்கலுக்காவது ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.