இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு பின்னால் வந்த நடிகர்கள் ரஜினியை தலைவர் எனவும் சூப்பர் ஸ்டார் எனவும் இப்போதும் அழைக்கிறார்கள். இப்போதும் ரஜினி படங்களுக்கென்று பெரிய வியாபாரம் இருக்கிறது. ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.630 கோடி வசூல் செய்தது. தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில்தான், சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் மூன்று நட்சத்திர ஹோட்டலாக மாறப்போவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் அதை உறுதி செய்தார். ‘35 வருடங்களாக செயல்பட்டு வந்த ராகவேந்திரா திருமண மண்டபம் வேறொரு பரிமாணத்திற்கு செல்லப் போகிறது.. இதுபற்றி தகுந்த நேரத்தில் அறிவிப்போம்’ என கூறியிருந்தார்..
இந்நிலையில்தான், பல வருடங்களுக்கு முன்பு ரஜினி பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது பேசிய ரஜினி ‘எனது மொத்த சொத்தில் பாதி இந்த திருமண மண்டபம்.. எனது காலத்திற்கு பிறகு இது தமிழக மக்களுக்கு போய் சேர வேண்டும்.. தமிழக மக்கள் ஒரு ரூபாய், 5 ரூபாய், 100 ரூபாய் என டிக்கெட் வாங்கி படங்களை பார்த்ததால் வந்த பணம்..
இதன் ஒவ்வொரு பைசாவும், உரிமையும் தமிழக மக்களுக்கே சொந்தம்’ என அதில் அவர் பேசியிருக்கிறார்.
மேலும் நியாயமாக பார்த்தால் அந்த சொத்து எனக்கு பிறகு என் இரு மகள்களுக்கும் செல்ல வேண்டும்.. ஆனால் மக்களின் நன்மைக்காக என் மகள்கள் இருவரும் அதை விட்டுக் கொடுத்துள்ளனர்.. எனவே, இந்த தியாகத்தின் பெருமை அவர்களுக்கே கிடைக்கவேண்டும்’ எனவும் ரஜினி பேசியிருந்தார்.,
ரஜினி அப்போது அப்படி பேசியிருந்த நிலையில் தற்போது அந்த மண்டபம் இருக்கும் இடத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல் வருவதாக செய்திகள் வெளிவருவது கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஆனாலும், ராகவேந்திரா மண்டபம் என்னவாகப்போகிறது என்பது ரஜினி தரப்பு விளக்கமளித்த பின்னரே தெரியவரும்…




