சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் 2013ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதோடு ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி வெளியாகவிருக்கிறது. வழக்கமாக ரஜினி படமென்றால் அவரின் ரசிகர்கள் அந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அது படத்திற்கான புரமோஷன் மட்டுமல்ல.. அந்த விழாவில் ரஜினி பேசுவதும் கவனத்தை பெரும்..
அதோடு, திரையுலகில் தனது எதிரிகள் மற்றும் தன்னை விமர்சிப்பவர்கள் பற்றி மறைமுகமாக ரஜினி சொல்லும் குட்டிக்கதையை அவரின் ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஆனால், ஜெயிலர் 2-வை பொறுத்தவரை ஆடியோ லான்ச் நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், தற்போது வரை அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
தற்போது, தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் அதற்கு அனுமதி கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஒருபக்கம், மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டது. ஆனால் ஏற்கனவே விஜயின் ஜனநாயகன் ஆடியோ லான்ச் அங்கு நடந்திருப்பதால் கண்டிப்பாக அதற்கு வந்த கூட்டத்தையும் இதற்கு வரும் கூட்டத்தையும் ஒப்பிட்டு பேசுவார்கள்..
அதோடு விஜயை பின்பற்றியே ரஜினி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்துகிறார் என பேசுவார்கள் என்பதால் ரஜினி அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். எனவே ஜெயிலர் 2 படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை என சொல்கிறார்கள்.




