நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 2023ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜெயிலர் திரைப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் கூட்டணி மீண்டும் இணைந்து தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் சிவ்ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், இந்த படம் தற்போது சென்சாரில் இருக்கிறது. படத்தைப் பார்த்து சென்சார் அதிகாரிகள் படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்களாம். அதிலும் சிலர் கண்டிப்பாக படம் ஹிட் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்களாம்.
அதேநேரம், படத்தின் ஒரு காட்சியில் தலையை வெட்டி டேபிளில் வைப்பது போல ஒரு காட்சி வருகிறதாம். அந்த காட்சி வேண்டுமென்றால் A சான்றிதழ்தான் கொடுப்போம். அந்த காட்சியை நீக்கிவிட்டால் U/A சான்றிதழ் கொடுக்கிறோம் என தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே கூலி திரைப்படம் A சான்றிதழ் பெற்றதை ரஜினி விரும்பவில்லை. தற்போது ஜெயிலர் 2-வுக்கும் A சான்றிதழ் வேண்டம் என ரஜினி நினைக்கிறாராம். ஆனால், நெல்சனோ அந்த காட்சி கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்..
ஜெயிலர் 2-வுக்கு A சான்றிதழ் கிடைக்குமா அல்லது U/A- வா என்பது விரைவில் தெரிந்து விடும். படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துவிட்டால் மல்டிபிளக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்படுவார்கள்.. இதனால் வசூல் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




