பாரதிராஜாவிடம் உதவியாளராக வேலை செய்து அவர் இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாக்யராஜ். அதன்பின் தானே படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடம் குறிப்பாக பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், சின்ன வீடு, முந்தானை முடிச்சு என சொல்லிக்கொண்டே போகலாம். 80களில் முக்கிய நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார் பாக்யராஜ். திரையுலகம் இவரை திரைக்கதை மன்னன் என கொண்டாடியது.
பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் முடிந்ததை ஒட்டி சில நாட்களுக்கு முன்பு ஒரு விழா நடந்தது. அந்த விழாவில் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினி ‘பாக்யராஜ் மட்டும் அவரின் படங்களின் உரிமைக்கு பணம் வாங்கியிருந்தால் போயஸ்கார்டனில் 5 வீடு வாங்கியிருக்கலாம்.. ஆனால் அவர் தப்பு பண்ணிவிட்டார்.. அதை செய்யாமல் விட்டுவிட்டார்’ என பேசுகின்றார்.
அதேமேடையில்தான் ‘ஒரு விழாவில் மேடையில் இருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசியதற்காக நிகழ்ச்சி முடிந்து நான் கிளம்பியபோது அந்த கட்சிக்காரர்கள் என்னை கல்லால் அடித்தார்கள்.. அப்போது என்னை பாதுகாப்பாக ஒரு போலீஸ் வண்டியில் ஏற்றி என்னை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது பாக்யராஜ்தான்’ என சொல்லியிருந்தார்.




