நான் நடிச்ச படத்திலேயே அதிக வசூல்!.. சசிக்குமாரை ஃபீல் பண்ண வைத்த டூரிஸ்ட் பேமிலி..

By :  MURUGAN
Published On 2025-05-13 20:05 IST   |   Updated On 2025-05-13 20:05:00 IST

Tourist family: சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படத்திலேயே அதிர வைத்தார். காதல் எதையும் தியாகம் செய்யும், நட்பு எப்போதும் உடனிருக்கும் என தமிழ் சினிமா பல வருடங்களாக போதித்ததை உடைத்து காதலும், நட்பும் துரோகமும் செய்யும் என காட்டியிருந்தார். இந்த படத்திற்கு சசிக்குமார் அமைத்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது.

அதன்பின் ஈசன் என்கிற படத்தை சசிக்குமார் இயக்கினார். ஆனால், அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அதன்பின் முழுநேர நடிகராக மாறிவிட்டார். சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் வெற்றி அவரை மார்க்கெட் உள்ள ஒரு நடிகராக மாற்றியது. எனவே, தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

கடந்த 15 வருடங்களாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் கடந்த 1ம் தேதி சசிக்குமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்த இந்த படம் ஒரு சூப்பர் ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியிருந்தது.


இலங்கையிலிருந்து படகு வழியாக தமிழகத்திற்கு வரும் ஒரு குடும்பம் இங்கே என்ன பிரச்சனையை சந்தித்தார்கள் என்பதை படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை. அதோடு, படம் நன்றாக இருப்பதாக டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட தியேட்டரில் வசூல் அதிகரிக்க துவங்கியது.

ஒருகட்டத்தில் ரெட்ரோ படத்தை தூக்கிவிட்டு இந்த படத்தை போட துவங்கினார்கள். கடந்த சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் இப்படம் மிகவும் அதிக வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. 8 கோடி செலவில் உருவான இப்படம் 50 கோடி வசூலை தாண்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சசிக்குமார் மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

நான் நடித்த படங்களில் குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள்தான் அதிக வசூலை பெற்றது. ஆனால், டூரிஸ்ட் பேமிலி படம் அந்த வசூலை தாண்டிவிட்டது. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது., இதனால், நான் சம்பளத்தை ஏற்ற மாட்டேன். ஏனெனில், இப்படத்தின் வெற்றி பலருக்கும் நம்பிக்கையை கொடுக்கும் என நம்புகிறேன். நல்ல கதைகள் சின்ன பட்ஜெட்டில் வெளிவரவேண்டும் என்பதே என் ஆசை’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News