ஓவர் ஆட்டிட்டியூட்!. மன்னிப்பு கேட்ட சூர்யா சேதுபதி!.. இதெல்லாம் தேவையா!...
Surya Sethupathi: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக மாறியிருக்கிறார். சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலரும் இருக்கும் நிலையில் இவரும் புதிதாக இணைந்திருக்கிறார். அதேநேரம், அப்பாவை போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தாமல் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.
120 கிலோ எடையில் இருந்த இவர் இந்த படத்திற்காக 60 கிலோ குறைத்திருக்கிறார். அதற்காக கடந்த ஒரு வருடத்தில் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றியிருக்கிறார். ஏற்கனவே அப்பா விஜய் சேதுபதியோடு சிந்துபாத் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தவர் இப்போது ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ளார்.
பீனிக்ஸ் படத்தை சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். எனவே, படம் முழுக்க அதகளமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களும் ரசிகர்களிடம் பேசப்பட்டது. இந்த படம் ஜூலை 4ம் தேதியான நேற்று வெளியாகி ஒரளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒருபக்கம், இந்த படத்தின் புரமோஷன் விழாக்களில் வாயில் பபிள்கம் மென்றுகொண்டு மிகவும் ஸ்டைலாக சூர்யா சேதுபதி சீன் போட்டதாக பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். ‘ஒரு படம் கூட வெளியாகல. இவ்வளவு ஆட்டிட்டியூட் காட்டுறான்’ என பலரும் அவரை விமர்சித்தனர்.
அதேபோல், அவரை ட்ரோல் செய்யும் யுடியூப் சேனல்களை சிலர் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக விஜய் சேதுபதியை செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தெரியாமல் நடந்திருக்கும். எங்கள் தரப்பில் இருந்து அப்படி மிரட்டல் வந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என மன்னிப்பு கேட்டார். மேலும், இப்படியெல்லாம் நடக்கும். இதையெல்லாம் தாண்டித்தான் நீ வர வேண்டும் என மகனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று சென்னை கமலா திரையரங்கில் முதல் காட்சி வெளியான பின் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சேதுபதி ‘அந்த பபிள்கம் மேட்டர் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என பேசியிருந்தார்.