பொய் சொல்ல தெரிஞ்சா சொல்லுங்க.. மிஸ்கினால் விஜயிடம் மாட்டிக் கொண்ட நட்டி.. சுவாரஸ்ய சம்பவம்..!
யூத் திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் நட்டி நடராஜ். சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர். தமிழ் முதல் ஹிந்தி வரை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்திருக்கின்றார்.
அதன்பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிக்க வந்த இவர் தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தி வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதில் யூத் திரைப்படத்தின் போது நடந்த சம்பவத்தை கூறியிருக்கின்றார். யூத் திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்தது. இந்த திரைப்படத்திற்கு நட்டி நடராஜன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். இந்த திரைப்படத்தில் வின்சென்ட் செல்வா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். அப்போது அவரை சண்முகராஜா என்று அழைப்பார்கள்.
அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி காலை தொடங்கி மாலை வரை எடுத்து முடிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அந்த காட்சியை மறுநாள் பார்க்கும் போது தான் அதில் ஒரு சிறிய பிழை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நடிகையின் உடையில் கண்டினியூட்டி மிஸ்-ஆகி இருந்தது. இதை பார்த்த மிஸ்கின் உடனே ஒளிப்பதிவாளரான நடராஜிடம் கூறியிருக்கின்றார். எப்படியாவது நடிகர் விஜய்யிடம் சொல்லி அந்த காட்சியை திரும்ப எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
இதனால் இருவருக்கும் இடையில் யார் அவரிடம் போய் சொல்வது என்று தயக்கம் நிலவி இருக்கின்றது. அப்போது மிஷ்கின் நடராஜை பிடித்து தள்ளி போய் கூறு என்று தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்த நடிகர் விஜய் நடராஜிடம் 'என்ன ஆச்சு என்று கேட்க நட்ராஜ் ஃபிலிம் பாக் ஆகிவிட்டது. அதனால் அந்த காட்சி அனைத்தையும் நாம் மறுபடியும் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.
இதை கேட்ட நடிகர் விஜய் அது நேற்று காலை முதல் மாலை வரை எடுத்தது. தற்போது மதியம் ஆகிவிட்டது, இன்று மாலை எனக்கு வேறொரு இடத்தில் அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது என்று கூறி இருக்கின்றார். உடனே நட்ராஜ் நேற்று ஏற்கனவே எடுத்திருப்பதால் என்னால் விரைவில் எடுத்து முடித்து விட முடியும் என்று கூறி அந்த ஷார்ட் அனைத்தையும் மாலைக்குள் எடுத்து முடித்து இருக்கின்றார் நடராஜ்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடராஜை அழைத்த நடிகர் விஜய் பொய் சொல்ல தெரிந்தால் சொல்ல வேண்டும். எதற்காக மற்றவர்களுக்காக பழியை உங்கள் மேல் போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு திருதிருவென்று தான் முழித்ததாகவும் பின்னர் மிஷ்கின் காரணமாக தான் இப்படி ஒரு தவறு ஏற்பட்டது' என்று அவர் கூறியதாக அந்த பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கின்றார்.