20 வருஷம் நல்ல பையனா இருந்தேன்!.. ரோலக்ஸால எல்லாம் போச்சி!.. இப்படி சொல்லிட்டாரே சூர்யா!..

By :  Murugan
Update: 2024-10-30 10:45 GMT

Kanguva: சினிமாவில் ஒரு நடிகர் மிகவும் நல்ல பையனாக வலம் வருவது கஷ்டம். ஏனெனில், நல்ல பழக்கங்கள் கொண்டவர்களையும் சினிமா மொத்தமாக மாற்றிவிடும். சுற்றி இருப்பவர்கள் கெடுத்துவிடுவார்கள். கட்டுப்பாடு இல்லையெனில் கெட்ட பழக்கங்கள் சீக்கிரமாகவே வந்துவிடும்.

ஆனாலும், சில நடிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அதில் முக்கியமானவர் சிவக்குமார். இவருக்கு சிகரெட், மது என எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. சூட்டிங் முடிந்தால் வீட்டுக்கு போய்விடுவார். அவர்களின் இரு மகன்களும் இப்போது அப்படியே இருக்கிறார்கள். சூர்யா, கார்த்தி இருவருக்குமே எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது.

சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாரே தவிர அவரும் சரி, கார்த்தியும் சரி. இதுவரை எந்த கிசுகிசுவிலும் மாட்டவில்லை. சினிமாவில் ஜென்டில்மேனாக இருவரும் வலந்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், சினிமாவுக்கு தேவை எனில் எப்படி சிவக்குமார் புகை பிடிப்பது போல் நடித்திருக்கிறாரோ அது போல சூர்யாவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்கிற வேடத்தில் வருவார் சூர்யா. போதை மருந்தை மூக்கில் உறிந்துவிட்டு கெத்தாக நடித்திருப்பார். ரசிகர்களுக்கு சூர்யாவின் அந்த வேடம் மிகவும் பிடித்திருந்தது. எனவே, ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு படம் எடுக்கும் எண்ணமும் லோகேஷ் - சூர்யாவுக்கு இருக்கிறது.

ஒருபக்கம், சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூர்யாவும் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால், அது எல்லாமே ஆங்கில ஊடகங்கள்தான்.

இந்நிலையில், அப்படி அவர் கொடுத்த ஒரு பேட்டியில் ரோலக்ஸ் வேடம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது ‘ரோலக்ஸ் வேடத்தில் நடிக்கும்போது எனக்கு சீன் பேப்பரை கூட லோகேஷ் கொடுக்கவில்லை. எல்லாமே அந்த இடத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த 20 வருடங்களாக நான் எந்த படத்திலும் சிகரெட் பிடிப்பது போல் நடிக்கவில்லை. ஆனால், ரோலக்ஸ் வேடத்தில் நடித்தபின் கெட்ட பையன் ஆகிவிட்டேன் (சிரிக்கிறார்). கமல் சார் முன்னால் என்னால் நடிக்க முடியாது என்பதால் அவர் வருவதற்கு முன்பே நடித்து முடித்துவிட்டேன்’ என சூர்யா சொல்லி இருக்கிறார்.

Tags:    

Similar News