அந்த விஷயத்துக்காகவே நாகேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவாரு... விஎஸ்.ராகவன் சொன்ன புதுத்தகவல்
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்காக நடிகை சுஹாசினி, பாஸ்கி ஆகியோர் விஎஸ்.ராகவனைப் பேட்டி கண்டனர். அப்போது நடந்த கலகல உரையாடலில் நடிகர் விஎஸ்.ராகவன் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷைப் பற்றி சில விஷயங்களைச் சொன்னார். அதே நேரம் நடிகர் விஎஸ்.ராகவனைப் பற்றி பாஸ்கி சில தகவல்களைச் சொன்னார். வாங்க பார்க்கலாம்.
நடிகர் விஎஸ்.ராகவனும், நாகேஷூம் சிறந்த நண்பர்களாம். அந்தக் காலத்துல விஎஸ்.ராகவன் வீட்டுக்கு நாகேஷ் அடிக்கடி போவாராம். அங்கு அவரது மகள் ஜானகி போடும் காபி அவ்வளவு ருசியாக இருக்குமாம். அதுக்காகவே நாகேஷ் விஎஸ்.ராகவன் வீட்டுக்கு அடிக்கடி போவாராம். வந்து கலகலன்னு பேசிவிட்டு போகும்போதும் ஒரு காபியைக் குடித்துவிட்டுத்தான் போவாராம். நாகேஷ் உடன் பழகி பழகி எனக்கும் அந்தக் காமெடி வந்துவிட்டது என்கிறார் விஎஸ்.ராகவன்.
அதே போல நிகழ்ச்சியில் ஆங்கராக வந்த பாஸ்கி விஎஸ்.ராகவனைக் கேள்வி கேட்டுக் கடுப்பேற்றினார். 'நீங்க நாகேஷ் வீட்டுக்குப் போவீங்களா?'ன்னு கேட்டார். 'அதான் எங்க வீட்டு காபி இருக்கே. நான் ஏன் அவரு வீட்டுக்குப் போகணும்' என்று சொல்கிறார் விஎஸ்.ராகவன். அதே போல பாஸ்கி போனில் விஎஸ்.ராகவனை ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்பாராம். அப்போது விஎஸ்.ராகவன் அவரிடம் 'வந்தா என்ன கொடுப்பீங்க?'ன்னு கேட்டாராம்.
அதற்கு பாஸ்கி 'மைக் கொடுப்போம்'னு சொன்னாராம். 'இப்படி விதண்டாவாதம்லாம் நிகழ்ச்சில வச்சிக்கணும். போன்ல நார்மலா பேசணும்'னு கடுப்பாகியுள்ளார் விஎஸ்.ராகவன். அப்புறம் 'ஒன் லக்'னு சொன்னேன். 'ஒரு லட்சமா கொடுப்பீர்கள்?'னு கேட்டார். 'இல்ல சார். நீங்க கொடுக்கணும்'னு சொன்னேன். 'அந்தமாதிரி நிலைமைக்கு பகவான் இன்னும் என்னை வைக்கல'ன்னு சொன்னாராம் விஎஸ்.ராகவன்.
'வண்டி அனுப்பிச்சறேன். வீடு எங்கே?'ன்னு கேட்டேன். 'அதான் மந்தவெளி டர்னிங் இருக்குல்ல. அதை தாண்டி வந்தீங்கன்னா...'ன்னு சொன்னாரு. 'ரொம்ப கஷ்டமாச்சே. அதைத் தாண்டுறது...'ன்னு சொன்னேன். 'அதான் போனை வச்சிடுறேன்'னாரு. 'சரி சார் சாரி சார்..'னு சொன்னேன். 'அப்புறம் எங்க?'ன்னு கேட்டேன். 'ராணி மெய்யம்மை ஸ்கூல் இருக்குல்ல. அதைத் தாண்டி...ன்னு சொல்றதுக்கு பயமாயிருக்கு. எதாவது சொல்லிடுறோம். அதைக் கடந்து வந்தீங்கன்னா ஒரு பழக்கடை இருக்கு'ன்னு சொன்னாரு. 'சார் அங்க ஞானப்பழம் கிடைக்குமா?'ன்னு கேட்டேன். 'இல்ல எலுமிச்சம்பழம் கிடைக்கும். நீ வா. உனக்கு நல்லா தேய்ச்சி விடுறேன்'னாரு. இது வந்து ஒரு போன் கால்ல நடந்த விஷயம்.
ஒரு தடவை அவருக்கிட்ட நான் கேட்குறேன். 'என்னைக்காவது ஒரு பாட்டல் விஷத்தை மடக் மடக்குன்னு குடிக்கணும்னு தோணுச்சுதா?'ன்னு கேட்டேன். 'இப்ப தோணுது. உங்கிட்ட பேசுறேன் பார்த்தியா. இதுக்கு ஒரு பாட்டில் விஷம் பெட்டர்..'னாரு. எனக்குத் தெரிஞ்சி இவரு கோபத்தைக் கூட ஹியூமரஸா கொண்டு வரக்கூடியவர். படங்கள்ல சீரியஸா பண்ணக்கூடியவர் பாஸ்கி கூட இருக்கும்போது மட்டும் மளமளன்னு காமெடியா பேசுறாரு என்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சுஹாசினி.