2024-ல் தமிழில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!.. மறக்க முடியாத மகாராஜா!...

By :  Murugan
Update: 2024-12-31 05:48 GMT

movies

ஒவ்வொரு வருடமும் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகிறது. அதில், சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் திரைப்படங்கள் என்பது வியாபார நோக்கத்திற்காக தயாரிக்கப்படுகிறது. சிலருக்கு மட்டுமே அது கலையாக பார்க்கப்படும்.

வெறும் கலைப்படமாக எடுத்தால் கல்லா கட்ட முடியாது என்பது தயாரிப்பாளர்களுக்கு தெரியும். தயாரிப்பாளர்களுக்கு சினிமா என்பது வியாபாரம்தான். இவ்வளவு பணம் போட்டால் இவ்வளவு லாபம் என்பதுதான் அவர்களின் கணக்கு. ஆனாலும். இதை மீறியும் சில இயக்குனர்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவார்கள். எண்ணிக்கையில் அவை குறைவு என்றாலும் பேசப்படும். அதில் சில படங்கள் நல்ல வசூலையும் பெறும். அந்தவகையில் 2024ம் வருடம் வெளிவந்து விமர்சனரீதியாக பாராட்டை பெற்ற சிறந்த திரைப்படங்களை இங்கே பார்ப்போம்.


கடந்த சில வருடங்களாக விஜய் சேதுபதிக்கு ஹிட் படம் அமையவில்லை. அதை போக்க வந்த திரைப்படமாக மகாராஜா அமைந்தது. தனது மகளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துவிட அவர்களை விஜய் சேதுபதி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதோடு வசூலையும் அள்ளியது. இந்த படம் ஹிந்தி மொழியில் ரீமேக்கும் செய்யப்படவிருக்கிறது.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் வாழைகளை வெட்டி வண்டியில் ஏற்றும் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் மாரி செல்வராஜுக்கு 20 கோடி லாபத்தையும் கொடுத்தது.


இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியான படம்தான் நந்தன். ஒரு கிராமத்தின் தலைவராக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவரை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்துவார்கள் என்பது இப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. சூரியின் கருடன் படம் கமர்ஷியல் படம் என்றாலும் அது உருவாக்கப்பட்ட விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படம் தங்கலான். சுதந்திரத்திற்கு முன்பு தமிழகத்தில் தங்கத்தை தேடி அலைந்த சில வெள்ளைக்காரார்கள் பற்றிய கதை இது. இந்த படத்தில் சியான் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கண்டிப்பாக 2024-ல் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று. ரஞ்சித் என்ன சொல்ல வந்தார் என்பது ரசிகர்களுக்கு புரியாமல் போனதால் வசூல்ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது.


96 பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கார்த்திக், அரவிந்த்சாமி நடித்து வெளியான மெய்யழகன் படமும் ஒரு சிறந்த ஃபீல் குட் படமாக அமைந்தது. உறவுகளின் அருமையை விளக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதேபோல், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படமும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. மோகன்லால் போன்ற மற்ற மொழி நடிகர்களும் இப்படத்தை பாராட்டியிருந்தார்கள்.

மேலும், புதுமுக நடிகர் பாரி இளவழகன் இயக்கி நடித்து வெளியான ஜமா படமும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. நாட்டுப்புற கலையான கூத்து கட்டுவதை அடிப்படையாக வைத்து இப்படத்தை அவர் உருவாக்கியிருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டை பெற்றாலும் ஜனரஞ்சக ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பை பெறவில்லை.

Tags:    

Similar News