டூரீஸ்ட் ஃபேமிலி இயக்குனருக்கு வலை விரிக்கும் சிம்பு,தனுஷ்.. அலார்ட்டா இரு புரோ!..
புதிதாக ஒரு இயக்குனர் படம் இயக்கி அப்படம் வெளியாகி எல்லோராலும் பேசப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றுவிட்டால் அந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்படுவார்கள். அந்த படத்தை பார்த்துவிட்டு அந்த இயக்குனரை கூப்பிட்டு பாராட்டி பேசுவார்கள்.
அப்படி பேசும்போது ‘எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க. நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்’ என்பார்கள். இது அந்த இயக்குனருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், அதேநேரம், பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்க சில வருடங்கள் ஆகிவிடும். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே கைவசம் சில படங்களை வைத்திருப்பார்கள். அதுவரை அந்த இயக்குனர் காத்திருக்க வேண்டும்.
இப்படி பல இயக்குனர்களின் வாழ்க்கையை பல நடிகர்கள் காலி செய்திருக்கிறார்கள். ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரை அழைத்து தனுஷ் ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என்றார். தனுஷுக்கான கதையை ரெடி பண்ணவே ராம்குமாருக்கு 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் தனுஷ் 2 வருடங்கள் காத்திருக்க வைத்தார். ஆனால், அது நடக்கவே இல்லை.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை ரஜினி அழைத்து பேசினார். ரஜினிக்காக ஒரு சரித்திரை கதையை சொன்னார் தேசிங்கு. ஆனால், அவரை நம்பாத ரஜினி ஒதுங்கிக்கொண்டார். அதன்பின் அந்த கதை சிம்புவுக்கு போனது. இப்போது வரை அது டேக் ஆப் ஆகவில்லை. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.
இப்படி அடங்க மறு கார்த்திக் தங்கவேல், இன்று நேற்று நாளை ரவிக்குமார் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இப்போது டூரிஸ்ட் பேமிலி எனும் ஃபீல் குட் படத்தை கொடுத்து கைத்தட்டல் வாங்கியிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். சிம்புவும், தனுஷும் படம் பார்த்துவிட்டு இவரை தொடர்பு கொண்டு படத்தை பற்றி பாராட்டி பேசிவிட்டு வழக்கம்போல் ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களின் ஸ்டைலுக்கு மசாலா கதைகளை அபிஷன் எழுதுவாரா என தெரியவில்லை. அபிஷன் என்ன கதை எழுதினாலும் ஒத்துகொண்டு கதையில் மாற்றம் சொல்லாமல் தனுஷும், சிம்புவும் அப்படியே நடிப்பார்கள் என சொல்ல முடியாது. அவர்களுக்காக அபிஷன் தன்னை மாற்றிக்கொண்டால் அவரின் அடையாளம் மாறிவிடும். அபிஷன் இதை எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.