கூலி முதல் கருப்பு வரை!.. இந்த மாதம் வெளியாகும் முக்கிய அப்டேட்ஸ்!...
July Updates: 2025ம் வருடத்தை பொறுத்தவரை கடந்த 6 மாதங்களாக முக்கிய அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அஜித்தின் குட் பேட் அக்லி படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் நேரடி தமிழ் படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை.
தனுஷின் குபேரன் படம் கூட தமிழ் மொழியில் ஹிட் அடிக்கவில்லை. தெலுங்கில் மட்டுமே இப்படம் வசூலை பெற்றது. விஜயை பொறுத்தவரை ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஆனால், 2 போஸ்டர்களை தவிர வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்தோ கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அவரின் அடுத்த பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ரஜினியை பொறுத்தவரை கூலி படத்தை முடித்துவிட்டு இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கூலி படத்தின் சிக்கிடு பாடல் மட்டுமே வெளியானது. இந்த பாடலை அனிருதும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருந்தனர். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த ஜுலை மாதம் 5 முக்கிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்!..
கூலி படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளிவரவுள்ளது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க துவங்கியுள்ள புதிய படத்தின் புரமோ வீடியோவும் விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இது ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான வட சென்னை படத்தின் கிளைக்கதை என வெற்றிமாறனே உறுதி செய்திருக்கிறார். வெற்றிமாறனும் சிம்புவும் முதன் முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ‘கருப்பு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். வழக்கறிஞராக இருக்கும் சூர்யா அவ்வப்போது கருப்பண்ணசாமி அவதாரம் எடுப்பது போல கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் கருப்பு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளது. அது மினி டீசர் வீடியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தனுஷுக்கு வருகிற 28ம் தேதி பிறந்தநாள் வருகிறது. எனவே, இட்லி கடை மற்றும் அவர் நடித்துள்ள ஹிந்தி படம் ஆகியவற்றின் முக்கிய அப்டேட்டுகள் அன்று வெளியாகும் என கணிக்கப்படுகிறது.